Monday, May 4, 2020

பித்தைத் தருவாய்

திருச்சிற்றம்பலம்
















<> பித்தைத் தருவாய் <>  

பித்தனென் பார்உன்னைப் பேயனென்பார் – உன்மேல்
.. பித்தெனக்(குஈயாயோ?

சித்தத்தில் நீயிருந்தால் – வேறு
.. சித்திகள் வேண்டுவனோ?
அத்தனுன் போலிருந்தால் – அதனின்
… ஆனந்தம் வேறுமுண்டோ?                     (…பித்தனென்பார்)


புத்தியில் நீபுகுந்தால் – நானும்
.. பூரணம் ஆகிடுவேன்
மொத்தமும் நான்என்னும் – உணர்வுள்
… மூழ்கி அமிழ்ந்திடுவேன்                         

அத்தனை அண்டங்களும் – என்றன்
.. அகத்தினுள் ளேயடங்கும் 
வித்துக்குள் ளேமரம்போய் – மறையும்
.. விந்தை நிகழ்ந்துவிடும்.                        (…பித்தனென்பார்)

எத்தை நினைப்பதற்கும் – நெஞ்சில்
.. எண்ணம் இருக்காது
சத்தெனும் ஒன்றில்உறை – மெய்யாம்
.. தத்துவம் நானாவேன்                         

சித்துப் பெருவெளியில் – ஆடும்
.. செல்வனுன் ஆட்டத்துள்ளே
சத்தமெல் லாமடங்கி – மௌன
.. சாகரத் துள்அமிழ்வேன்.                        (…பித்தனென்பார்)


அனந்த்  5-4-2020 சோமவாரப் பிரதோஷம்
ஒலிப்பதிவு: https://drive.google.com/file/d/1ZKxQdgA_xcGzhJyL7nXFCn9hkQO7MiwA/view?usp=sharing

No comments: