Wednesday, June 17, 2020

துதிக் கதம்பம்


இன்று பிரதோஷ நன்னாள்.

       துதிக் கதம்பம்:


   <>                                                                
 















   <> உண்ணாயோ? <>

உன்றன் நெற்றிக் கண்ணுக்கோர்
உணவாய் ஆவான் காமன்உன்
புன்சி ரிப்புக் கிரையாகும்
புரங்கள் மூன்றும் கால்விரலுக்(கு)
அன்ன மாகும் அரக்கன்தன்
அடலும் என்றன் அகந்தைஉண்ண
என்ன வகையை ஏற்பாயென்(று)
எதிர்பார்த் துள்ளம் ஏங்குவனே.

(அடல் = வலிமை)

***********************


   











<> கண்டவிடம் <>

தொண்டைக் குழியதனில் தொங்கிநிற்கும் நஞ்சுநின்
தொண்டர்க் கருள்திறத்தைச் செப்புவதைக் கண்டவர்கள்
கண்டவிடச் சீர்பற்றிக் கண்டவிடம் பேசிநிற்பர்
உண்டதில்காண் ஓர்பங்(கு) உமைக்கு.

(அமரரையும் அசுரரையும் ஆலகால விடத் தாக்குதலின்றி காப்பாற்றிய சிவபெருமானது அருளின் மேன்மையை அடியவர் போற்றுகையில் அந்த விடத்தைப் பெருமானது கழுத்தில் தங்கவைத்து அவரது மேனியைக் காத்த பெருமை உமையம்மைக்கு உண்டு என்றும் நினைவு கூர்வர் என்றவாறு)

***********************




                    <> ஓவாதருள் <>

ஆட்டோவா அம்பலத்துள்
பாட்டோவா அடியர்குரல்
கேட்டோவா நினைக்காணும்
வேட்டோவா துள(ம்)அருளே.

(திருக்கூத்து ஓயாத பொன்னம்பலத்துள் உன்புகழை ஓயாமற் பாடுவோரின் குரலைக் கேட்பது ஓயாமல் இருக்கும் உன்னை காணும் வேட்கை ஓயாத உள்ளத்தை எனக்கு நீ அருள்வாயே; காண்க பன்னிருதிருமுறை 12.45.3)

<> ********************** <>

அனந்த் 17/18-6-2020

Tuesday, June 2, 2020

ஏற்பாய்

இன்று பிரதோஷ நன்னாள்
திருச்சிற்றம்பலம்

Natarajar-Panchakruthyam ஐந்தொழில் புரிவோன்.jpg

         <> ஏற்பாய் <>
ஓடி வந்த நதியை அந்த ஓதம் ஏற்ப தில்லையோ?
பாடி வான்ப றந்த புள்ளைப் பூமி ஏற்ப தில்லையோ?
ஆடி நிற்கும் ஐய வுன்னைச் சேரும் ஆசை மேலிட
நாடி வந்த நாய னேற்கு நாதி நீயும் அல்லையோ?

வாடி நிற்கும் பயிர்வ ருந்தி வானின் தயவை நாடலும்
கூவந்த  துணையி  ழந்த குருடன் வழியைத் தேடலும்
தேடி வைத்த  செல்வம் சென்ற  துயரில் ஏழை வாடலும்
நாடி வந்த நாய னேனின் நிலைமை என்றே ஆவதோ?  

சூடி நிற்கும் தூய கொன்றை யோடு நின்று யாவரும்
கூடி நின்று காண ஆல முண்ட கண்ட! உன்புகழ்
பாடி நிற்கும் பத்தர்  ஊடு பாவியான நானுனை
நாடி நிற்றல் கண்டு நிந்தை செய்தி டாமல் ஏற்பையே.

(ஓதம் = கடல்).  
... அனந்த் 3-6-2020