Tuesday, June 2, 2020

ஏற்பாய்

இன்று பிரதோஷ நன்னாள்
திருச்சிற்றம்பலம்

Natarajar-Panchakruthyam ஐந்தொழில் புரிவோன்.jpg

         <> ஏற்பாய் <>
ஓடி வந்த நதியை அந்த ஓதம் ஏற்ப தில்லையோ?
பாடி வான்ப றந்த புள்ளைப் பூமி ஏற்ப தில்லையோ?
ஆடி நிற்கும் ஐய வுன்னைச் சேரும் ஆசை மேலிட
நாடி வந்த நாய னேற்கு நாதி நீயும் அல்லையோ?

வாடி நிற்கும் பயிர்வ ருந்தி வானின் தயவை நாடலும்
கூவந்த  துணையி  ழந்த குருடன் வழியைத் தேடலும்
தேடி வைத்த  செல்வம் சென்ற  துயரில் ஏழை வாடலும்
நாடி வந்த நாய னேனின் நிலைமை என்றே ஆவதோ?  

சூடி நிற்கும் தூய கொன்றை யோடு நின்று யாவரும்
கூடி நின்று காண ஆல முண்ட கண்ட! உன்புகழ்
பாடி நிற்கும் பத்தர்  ஊடு பாவியான நானுனை
நாடி நிற்றல் கண்டு நிந்தை செய்தி டாமல் ஏற்பையே.

(ஓதம் = கடல்).  
... அனந்த் 3-6-2020

No comments: