Saturday, August 15, 2020

சத்சித் சுகம்

பிரதோஷப் பாடல்.

                                 திருச்சிற்றம்பலம்

  

                 


                                <> சத்சித் சுகம் <>

 

சிக்கென் றெனைப்பிடித்த சீவபோ தம்நீக்கும்

வக்கறியாப் பேதையை வள்ளலுன்பக்கம்

வரவழைத்து வெட்டவெளி தன்னில்நட மாடும்

பரம்காண வைத்தாய் பரிந்து.      

 

உண்டுறங்கும் ஊனுடலை உண்மையெனப் பேணியுனைக்

கண்டறிய வொட்டாத காரிருளாய்மண்டியஎன்

மாயா மலம்நீங்கச் சிற்சபையையில் கூட்டிவைத்த

நேயாஎன் நெஞ்சுள் நிலை...

 

பேச்சில்லா மௌனியாய்ப் பேருண்மை விண்டுரைக்கும்

ஆச்சரியம் தன்னையிங்(கு) ஆரறிவார்கூச்சல்மிகு

என்னுள்ளந் தன்னில் எழுந்தருளி என்றனையும்

உன்னுருவாய் உன்னவருள் தா..

 

எண்ணங்கள் தம்மை தீயிலிட்டு இறக்கவைத்துச்

சுண்ணவெண் ணீறாக்கித் தூய்மையுடன் – வண்ணமாய்

என்னுள் இலங்கிடும் உன்னுருவின் மேல்சாத்தித்

துன்னுவேன் சத்சித் சுகம்

(துன்னல் = மேவுதல்)

 

வாவென் றுனைநான் அழைத்திட வேண்டிஎன் வாய்திறக்கின்

தேவென் றெனுள்நீ திகழ்ந்திடல் கண்டு திகைத்துநிற்பேன்

பாவொன் றெழுதியிப் பாரோர்க் குனசீர் பகரஎண்ணின்

ஓவென் றழவைத் தொருசொலும் வாரா தொடுங்குமன்றே.

 

அனந்த் 15-8-2020

No comments: