திருச்சிற்றம்பலம்
நிலமொடோ ரைந்தாய் நேரினில் காணும்
…நிகழ்வெலாம்
மாயைகொண் டியக்கி
.. நீங்கிடா
தவற்றுள் நிலைத்திடும் இருப்பாய்
……. நினைவினைத்
தாண்டிய நிலையில்
அலகிலா வெளியில் அகன்றிடா அறிவாய்
…அனைத்துளும் உறைந்திடும்
மகிழ்வாய்
.. ஐயநீ திகழும்
அதிசயம் தன்னை
…….. அகிலம்வாழ்
அனைவரும் அறிய
நிலவுலாச் சடையுள் நீரினை நிறுத்தி
….நிருத்தமொன்
றாடியோர் கரத்தால்
.. நின்னடிச் சாரும் நெறியினைக்
காட்டும்
…….நேர்த்தியை நுவன்றிடப் போமோ
பலவுமாய் ஒன்றாய்ப் பரந்திடும்
பரமே
…பார்த்திடத் திகட்டிடா அழகே
.. பணிந்துன புகழைப் பரவியான்
இந்தப்
……. பாரினில் வாழ்ந்திட அருளே.
(உன
புகழ் = உனது புகழ்.)
விளக்கம்: ஐயனே! உன்னுள் சக்தி வடிவில்
உறையும் மாயையால், விண், காற்று, தீ, நிலம், நீர்
ஆகிய ஐம்பூதங்களையும் அவற்றின் சேர்க்கையால் இவ்வுலகத்தையும்
உருவாக்கி அவற்றை இயக்கிடும் நீ, அவை யாவுள்ளும் ’இருப்பு’ (‘சத்’, உள்ளது)
என்னும் தத்துவமாகவும், மனத்திற்கெட்டாத
நிலையான எல்லையில்லாப் பரவெளியில் அறிவு (’சித்’) என்னும்
தத்துவமாகவும், எல்லா உயிர்களுக்குள்ளும் மகிழ்வு (ஆனந்தம்) என்னும்
தத்துவமாகவும் (-சச்சிதானந்த வத்துவாய்த்-) திகழ்கின்ற அதிசயத்தை உலகினர் யாவரும்
அறியும் வண்ணம், சந்திரன் உலவும் உன் சடையினுள் கங்கை நீரை
அடக்கியவாறு, தில்லைத் திருத்தலத்தில் நீ நாட்டியம் ஒன்றை
ஆடி, உன் வலது கரத்தினால் உனது திருவடியைச் சார்தலே
முத்தியடையும் வழியாகும் எனக் காட்டி நிற்கும் சிறப்பைச் சொல்லால் உரைக்க இயலுமோ? ஒன்றெனவும், பலவெனவும்
பரந்து நிற்கும் காணத் திகட்டாத அழகுருவானவனே! உன்னைப் பணிந்து போற்றி நான்
இப்புவியில் வாழுமாறு அருள்வாயாக.
... அனந்த் 27-4-2022