திருச்சிற்றம்பலம்
<> நாமே சிவம் <>
பாசம் பசுபதியைச் சார்ந்தபின் பண்டைவினை
மாசு மறைந்தழியும் மண்ணிதனில் - கூசிடுதுர்
வாசம் மலிகழிநீர் வாரிதியைச் சேரினுண்டோ
நீசநீர் என்னும் நிலை?
(வாரிதி = கடல்; நீச = இழிந்த, ஈனமான, தாழ்ந்த)
நிலையான நின்மலனாய் நிற்போனைப் பற்றின்
தொலையாதோ தொல்லைதரு பாசம் – மலையொன்றில்
உண்ணா முலையாளோ டுள்ளான் உருவருவாம்
அண்ணா மலையாய் அவன். 2
அவனியில் தேடி அலையாதீர் நும்தம்
பவநோய் பசுபதியைப் பாடத் – துவண்டழிந்து
சச்சிதா னந்தப் பரசிவத்தி லொன்றியபின்
நிச்சலமே நிற்கும் தனித்து. 3. 3
தனித்தொளிரும் சச்சித் சுகமதனை நாடாமல்
அனித்தச் சுகத்திற் கலைந்து – சனித்த
பயன்பெறாப் பேதையராய் ஆகா தரன்அம்
புயத்தாளைக் கொள்வாய் புகல் 4
(சத் = இருப்பு, உண்மை; சித் = அறிவு.)
கல்லாலின் கீழே பவப்பிணி தீர்வழியைச்
சொல்லாத சொல்லால் நவின்றஅந் – நல்லோன்
தனதடியார் நோய்தீர்க்கத் தந்த மருந்தைக்
கனகசபை உள்ளேசென்(று) உண். 5
உண்ணீர் இருக்க உவர்ப்புநீர் தேடிநிதம்
கண்ணீர் வடிக்கும் கதைவிடுத்துத் – தண்ணீர்
தலைதாங்கும் சங்கரன்தாள் சார்ந்தென்று முள்ள
நிலையான இன்பத்துள் நில். 6
நில்லாத நீரோட்டம் அன்ன நினைவுகள்
எல்லாம் எழுமிடம் ஏதென்று - சொல்லேதும்
இல்லாமல் உண்ணோக்கிச் சும்மா இருத்தற்குக்
கல்லாமல் கற்றிடப் பார். 7
பாரொடு விண்ணும் பரந்த பரசிவத்தின்
சீரையுட் சிந்தித்(து) உணரலன்றி – யார்க்கும்
எடுத்துரைக்க ஏலா தெனவே குருவை
அடுத்தறிதல் ஆமே வழி. 8
வழிபடும் தேவனே மாறா இருப்பாய்
வழிகாட்டி உள்ளீர்த்து மாயை – அழித்தவனைச்
சேர்ந்திடச் செய்தபின் நானொழிந்து தானாதல்
நேர்ந்திடும்பின் நாமே சிவம். 9
சிவனேயாய்த் தோன்றுமெல்லாச் சீவனும் மெய்யில்
அவன்நிகழ்த்தும் ஆட்டமெனக் காணும் -– உவகைஉள்
ஊறும் உருவருவின் உண்மை தெளிவாகும்
பாறும்நம் பந்தபா சம். 10
[மண்டலித்து வந்த அந்தாதிப் பதிகம்.]
... அனந்த் 14-4-2022 பிரதோஷம்.
No comments:
Post a Comment