திருச்சிற்றம்பலம்
<> நிசமறிதல் <>
பாரிலே பார்த்திடும் பற்பல காட்சியுள் மனத்தினைப் பதித்த லாலே
.. பட்டிடும் துன்பொடு பலசுகம் யாவையும் மெய்யென நினைக்கும் மாந்தர்
ஓர்கணப் போதுதாம் உற்றிடும் உணர்வுகள் உதித்திடும் இடமே தென்றே
.. ஓர்ந்திடில் காண்பர்தம் உள்ளுறை இருப்பெனும் திரையிலே காட்சி யாக
நேர்வன யாவுமே நினைவுகள் சேர்க்கையே அன்றிமெய் அல்ல வென்னும்
.. நிசத்தினை அறிந்துதம் நினைவுகள் நானெனும் அகந்தையின் ஆட்ட மென்று
தேர்ந்துநின் அருள்நிறை திருவடி சேர்ந்தவர் உன்நினை வன்றி வேறு
… சிந்தனை துறந்துதம் செயல்களை ஆற்றிடின் சிவபதம் அடைகு வாரே.
... அனந்த் 27-5-2022