திருச்சிற்றம்பலம்
<> போதம் பிறக்கச் செய்தருள் <>
தானந் தனத்தத் தனதான
தானந் தனத்தத் தனதான தனதானா
காலொன் றுயர்த்தித் தலைமீது
....காணுங் குறிப்பைச் செயகாளி
......தோலும் படிக்குப் பணிநீமுன்
.........பேரம் பலத்திற் கொருராச னெனுமாய
சாலம் பிறர்க்குத் தெரியாமல்
....ஞாலம் பதித்துப் பிறபாதம்
.......மேலென் றிருத்தித் தொழுவோர்கள்
.........காணும் படிக்குச் செயுலீலை தனைநானு
மாலங் குடித்துத் தடுமாறி
....யாடுங் கணத்திற் சுடுதீயுன்
......னாகங் கெடுத்துப் பரவாம
.........லாகும் படிக்குச் செயுமாது மறிவோமே
காலம் பெருக்கிக் கடைநாளில்
....காலன் பிடித்துச் செலுநாளுன்
.......காலின் சிறப்பைத் தெரிஞான
………. போதம் பிறக்கக் குறியாயென் பெருமானே.
பதம்பிரித்து:
கால் ஒன்று உயர்த்தித் தலை மீது
....காணும் குறிப்பைச் செய காளி
......தோலும் படிக்குப் பணி நீ முன்
.........பேர் அம்பலத்திற்கு ஒரு ராசன் எனும் மாய
சாலம் பிறர்க்குத் தெரியாமல்
....ஞாலம் பதித்துப் பிற பாதம்
.......மேல் என்று இருத்தித் தொழுவோர்கள்
.........காணும் படிக்குச் செயும் லீலை தனை நானும்
ஆலம் குடித்துத் தடுமாறி
....ஆடுங் கணத்தில் சுடு தீ உன்
......ஆகம் கெடுத்துப் பரவாமல்
.........ஆகும் படிக்குச் செயும் மாதும் அறிவோமே
காலம் பெருக்கிக் கடை நாளில்
....காலன் பிடித்துச் செலும் நாள் உன்
.......காலின் சிறப்பைத் தெரிஞான
………..போதம் பிறக்கக் குறியாய் என் பெருமானே.
(பணி = பண்ணி என்பது சந்தத்திற்காகக் குறுகியது; பணிநீமுன் – முன் நீ ப(ண்)ணி எனக் கொண்டு கூட்டிப் பொருள் கொள்ளவும்; ஆகம் = உடல்..)
பொருள் விளக்கம்: பெருமானே! நீ முன்னமொரு காலத்தில், உனது (வலது) காலை உன் தலைக்கு மேலாக உயர்த்தி ஒரு நடனத்தைச் செய்து, உன்னுடன் போட்டியிட்ட காளியன்னையைத் தோல்வியுறச் செய்து தில்லைப் பேரம்பலத்திற்கு நீயே அரசனெனச் செய்த மாயா சாலமானது மற்றோர்க்குத் தெரியாத வண்ணம், அச்சபையில் உன்னைத் தொழவரும் அடியார்முன், வலது காலைப் பூமியில் பதித்து இடது காலை மேலே உயர்த்திக் காட்டி அப்பாதத்தை அவர்கள் பணிய வரும்படி செய்த திருவிளையாட்டை, திருப்பாற் கடலிலிருந்து எழுந்த ஆலகால நஞ்சு உன் உடலில் பரவிச் சுட்டுத் தீங்கு விளைவிக்கா வண்ணம் உன்னைக் காப்பாற்றிய உமையம்மையும் அடியேனும் அறிவோம். எனது வாழ்நாளை வீணாக்கி, இறுதியில் இயமன் வந்து என்னைப் பிடித்துச் செல்லுங் காலத்தில் உனது இரு கால்களின் மேன்மையை உணரும் மெய்யறிவைத் தர நீ உளங்கொள்வாயாக..
படம் : தூண் சிற்பம், பேரூர் (இணையத்திலிருந்து.)
அனந்த் 23-9-2022 பிரதோஷம்