Saturday, January 21, 2023

தத்துவன்

 

இன்று பிரதோஷ நன்னாள்

திருச்சிற்றம்பலம்

                            <> தத்துவன் <>





சித்தத்துள் ளேசிவம் நாடி அறிந்திடும் சீரடியார்

அத்தனை சீவர் அகத்துளும் ஐயன் அமர்ந்திருக்கும்

வித்தகம் காண்பார் வியப்பார் அதனினும் வேறெனவோர்

முத்தியை நச்சார் மவுன நிலையினுள் மூழ்குவரே. 

 

நானென நம்முள்ளே என்றும் இலங்கும்  நிசஉணர்வு

தானொரு கட்டிலாச் சத்தியம் அஃதே சபைநடுவே

மானிடர் காண வடிவெடுத் தாடிடும் வான்புலியூர்க்

கோனெனக் கண்டு குறுகுமின் அன்னோன் குரைகழலே.


... அனந்த் 19-1-2023

Tuesday, January 3, 2023

அடி மலர்

 திருச்சிற்றம்பலம்





              <> அடி மலர் <>

பொன்னம் பலத்தோய் புவியுள்ளோர்
... பொன்னிற் சிறந்த உன்னருளாம்

பொன்னை விடுத்துப் புகலிடமாய்ப்
.... பொருளை நாடும் புன்மையென்னே!

துன்னும் அடியார் தூயமனத்
.. துள்ளே நித்தம் நடமாடும்

மன்னே மணியே மயக்கறுக்கும்
... மருந்தே விருந்தே என்வாழ்வே.



வாழ்வும் தாழ்வும் வரும்போகும்
... வற்றா நதியும் வற்றிவிடும்

பாழும் உலகில் பார்ப்பதெலாம்
.. பகலில் கனவாய் மறைந்துவிடும்

சூழும் வினையின் சூழ்ச்சியிது
... தொடரா தழியச் சார்ந்திடுவோம்

கேழில் கருணை மழைபொழியும்
.. கூத்தன் பொன்னார் அடிமலரே.

(கேழில் = ஒப்பில்லாத)