திருச்சிற்றம்பலம்
இன்று சோமவாரப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்,
<> மயக்கும் முரண் <>
வெண்ணீற்று மேனியில் கரியுரியைப் போர்த்திடுவாய்
தண்ணீரைத் தாங்கித் தழலையும்கை ஏந்திடுவாய்
கண்மூன்றும் மூடிக் கைச்சாடை காட்டிடுவாய்
எண்ணில்இம் முரணன்றே எனையுன்பால் ஈர்த்ததுவே.
*********
<> அளவிலாப் பரிவு <>
பாவியிவன் என்றிந்தும் பரிவுடனே ஏற்றுத்
தேவனுன்றன் திருவடியார் கூட்டினிலே சேர்த்து
மூவினைகள் எனைமயக்கில் மூழ்கவிடா வண்ணம்
மூவிலைவேல் ஏந்திடுவோய் முத்திநிலை சேர்ப்பாய்
(நாலடித் தரவுக் கொச்சகக் கலிப்பா)
…………….அனந்த் 27/28-8-2023