Tuesday, September 26, 2023

துணைபுரிவாய்

 

இன்று பிரதோஷ நன்னாள்.


திருச்சிற்றம்பலம் 




                          


 

       <> துணைபுரிவாய் <>

 

படித்தவர்பால் சென்று பரமனுனைப்

.. பணிவகையைப் பயிலா நாயனையேன் 

 

நடித்திடுவேன் நல்லோன் எனப்பிறர்முன்

.. நகையுடன்நீ அதனைக் கண்டுமென்னை

 

அடிக்காதுன் தாள்பால் அணுகுதற்(கு)

.. அனுமதியும் அளித்தாய் ஆங்கதனால்

 

துடிக்கின்றேன் உன்றன் அருட்பெருக்கின்

…திறம்நினைத்துப் புலியூர்த் தூமணியே

 

 

                                                      ……. அனந்த் 26-9-2023

Monday, September 11, 2023

 இன்று பிரதோஷ நன்னாள். 

திருச்சிற்றம்பலம்

 

        <> புலியூர்த் துரை <>

 

 

                                 Natarajar_at_chidambaram-2.jpg

 

முழங்கிடும் துடியொடும் முடியணி மதியொடும்

…. முத்தொழில் புரிந்து ஞானம்

 

வழங்கிடும் கரத்துடன் மன்றினில் நடமிடும்

.. வள்ளலே அடியர் உள்ளப்

 

பழங்குடில் தொறுமெழுந் தருளுமெய்ப் பொருளுன

.. பாங்கினைப் பகரல் ஆமோ?

 

செழுங்கதிர் எனவொளிர் சிவபுரத் தரச!எம்

.. செல்வமே புலியூர்த் தேவே!

 

(பொருளுன = பொருள் உனது)    

 

……………..  அனந்த் 12-9-2023