Friday, April 19, 2024

 நாளை (20-4-2024) சனிப்பிரதோஷச் சிறப்பு நன்னாள்.

திருச்சிற்றம்பலம்


                   

ஆசையாய் என்னுளே ஆண்டவனுக் காக அமைக்கஎண்ணும்

வாசமார் ஆலய வரைபடம் கண்டதும் வந்துநிற்பார்

நாசமே செய்திட நண்ணியோர் ஐவர்; நடுங்கிநிற்பேன்

ஈசனே! என்றுஇவ் இழிநிலை மாறுமென்(று) ஏங்குவனே


                                       🌺🌺🌺


                                 < அரனும் அரவமும்>

                       

இரவில் நடமாடும் இரைதேடி ஊரும்

அரவத்தோ டாடும் அணியும் – உரியுண்டு

பண்ணிசை கேட்டுப் பரவசங் கொள்ளரவு

எண்ணிலெம் ஈசற் கிணை.

(பாம்பு:  ஒலியெழுப்பிக் கொண்டு படமெடுத்து ஆடும், இரவில் இரையைத் தேடு ஊரும்; தோலாகிய  ஆடை உண்டு.  மகுடியின் இசைக்கு மயங்கி ஆடும்.

சிவன்: இடுகாட்டில் இரவில் நடம்புரிவான்; உணவைத் தேடி காளை மேல் ஊர்வான். அடியார்கள் பண்ணோடு பாடும் இசையில் மனம் மகிழ்வான்.)  





Friday, April 5, 2024

இன்று சனிப்பிரதோஷச் சிறப்பு நன்னாள்.

திருச்சிற்றம்பலம்

                                <>  தழல் <>

                                                  











துன்னுமிருள் கிழிக்குஞ் சுடுதீ அனையசடை

மன்னுமரு ளீசன் மாயை மருண்டோடப்

பொன்னொளிரு மேடை புகுந்து நடமாடித்

தன்னடியார் நெஞ்சுள் சொலிக்கும் தழலெனவே.

                                     ************

                                      <> அருள் <>

                     

கண்ணிலே தூசு விழுந்துநான் கரையினும்

புண்ணியா உன்றன் புகழ்நினைந் தழுவதாய்

எண்ணிடின் அலாலிவ்  வீனனுன் னருள்பெறப்

பண்ணிலேன் ஏதொரு புண்ணியம் ஐயனே.  


                                                                      .......... அனந்த் 6-4-2024