இன்று (22-5-2013) பிரதோஷ நன்னாள்
திருச்சிற்றம்பலம்
<> கூத்தாடும்
ஐயன் <>
.........அடியவ ரோடே
கூடிமெய்ப் பாதையில் செல்வோம் - அவர்
.........துணையுடன் நம்மைக்
கூடும்வல் வினையெல்லாம் வெல்வோம் 1
ஆத்தாளை அங்கமாய்க் கொண்டான் - அவள்
..........கருணையி னாலே
ஆலம் அமுதென உண்டான் - அவன்
..........வடிவினை இங்கே
ஆர்தாம் முழுதுமாய்க் கண்டார்?
2
தாத்தைஎன் றாடுவான் தில்லை – அவன்
..........தாள்பணி வோர்தமைச்
சாராது ஊழ்தரும் தொல்லை. – அவர்
..........செல்லும் வழிக்கினிச்
சதிராடும் மன்றமே எல்லை. 3
வார்த்தைக் கடங்கா
ஆட்டந்தான்– அதை
..........மாந்திட ஆங்கே
வருமாம் அடியார் கூட்டந்தான் - நடம்
..........கண்ட அவர்க்கு
வருமோவே றெதிலும் நாட்டந்தான்? 4
கூத்தாடும் ஐயன்சொல் வேதம்
- அவன்
..........குரைகழல் நாதம்
கூட்டும்ஓங் காரமாம் கீதம் – அதில்
..........கூடியே காண்போம்
கூறும் தரமில்லா போதம். 5
அனந்த் 22-5-2013
யாப்பு: காவடிச்சிந்து வகை (இயைபு எதுகை, முடுகு)
முகப்பு ஓவியம்: சு. ரவி (நன்றியுடன்)
ஒலிப்பதிவு. ராகமாலிகை (ஆனந்தபைரவி, கமாஸ், ஷண்முகப்ரியா, சுருட்டி இராகங்கள்) தாளம்: ஆதி. http://raretfm.mayyam.com/ananth/kooththAdum.mp3