திருச்சிற்றம்பலம்
<> அருணையில் அற்புதம் <>
சந்தக் குழிப்பு:
தத்தன தனதன தானா தனதன
..தத்தன தனதன தானா தனதன
..தத்தன தனதன தானா தனதன தனதானா
அற்பனில் கடையனென் றூரார் உரைசெய
..அச்சம துடலினில் பாயா துணர்வெதும்
..அற்றதொர் நிலையினில் ஆன்றோர் அவையினின் நடுவேயான்
கற்றதில் கடுகினின் கூறா யினுமொரு
..கற்பனை யதும்நிலை யாதே மறையவொர்
..கற்சிலை எனஎனைக் காண்போர் நகைசெய விடலாமோ?
அற்புதம் பலநிகழ் ஊராம் அருணையில்
..அச்சுதன் அயனொடு காணா அடிமுடி
..அத்த!நின் அருகினில் சார்ந்தோர் இடரது களைவோனே!
முற்றுமென் உடலுயிர் நீயாய் உணருமெய்
..முற்றிய அறிவினை யானே பெறஎழில்
..முத்தென ஒளிர்நகை மாதாதுணைவ!நீ
பொருள் விளக்கம்: நூலறிவு இல்லாத கடையனாக இருப்பினும் திருவண்ணாமலையில் ஆதிப் பரம்பொருளாய் விளங்குபவனின் திறத்தை நினைத்து, அவனைச் சார்ந்தால் இந்த உலகத் தொடர்பான சிற்றறிவின் தேவையேதும் இன்றி அவனைத் தன்னுள் உணர்ந்துகொள்ளும் பேரறிவு கைகூடும் என்றவாறு.
யாப்பு: 13-சீர் வண்ண விருத்தம்; பாடலின் ஒலிவடிவை .mp3 file இணைப்பில் காணலாம். படங்கள் நன்றியுடன் இணையத்திலிருந்து..
.. அனந்த் 20-7-2013