Saturday, November 30, 2013

திருச்சிற்றம்பலம்

Inline image 1

<> தடை <>


அருள்தரும் விழியுடன் அம்பலத் தாடிநீ
….அம்புயக் கரத்தை நீட்டி
.….அடியவர் பாலுன(து) அன்பினைக் காட்டுமோர்
.....ஆவலில் காத்து நிற்க,

பெருமிடர் மலிந்ததிவ் வாழ்வென உணர்ந்தினிப்
….பிறந்திடா வகையை நாடிப்
…..பேதையேன் இவ்விடம் பெரும!நின் கருணையைப்
……..பெற்றிட வேண்டி நிற்க,
 
மருள்தரும் வகையினில் மாபெரும் தடையென
…..மனமெனும் பகைவன் என்றன்
…...வழியினை மறைப்பதன் மருமம்ஏன்? உன்னிலும்
……...வல்லவன் இல்லை என்று

கருதிநான் இருந்ததும் கனவென ஆகுமோ?
…..காலனைச் செறுத்த கோவே!
…....கணத்தினில் விரைந்துன கழலடி சேர்த்தெனைக்
…….....காத்தலுன் கடமை அன்றோ? 


..அனந்த் 30-11-2013

Friday, November 15, 2013

இன்று பிரதோஷ நன்னாள்.

திருச்சிற்றம்பலம்


Inline image 1


<> பிறவா வரம் அருள்வாய் <>



26-சீர் வண்ண விருத்தம்

சந்தக்குழிப்பு: தான தந்தன தானா தனாதன

தான தந்தன தானா தனாதன

தான தந்தன தானா தனாதன    தனதான

(நாத விந்துக லாதீ நமோநம – என்று தொடங்கும் திருப்புகழ்ச் சந்தம்)



வானி ழிந்திடு நீரோ டுபாதிநி லாவ ணிந்திடு நாதா மனோகர

.....மாது டன்மலை மீதே குலாவிடும்         பரமேசா

..வாரி சம்மென மாகாந் திமேவிய பாத மென்மலர் மேலே மதாணியாய்

.....வானு றைந்திடு தேவா தியோர்முடி       அணிவோனே



மானொ டும்மழு வாளோ டுமேலெழு தீயொ டுந்துடி வாகா கவேந்துமுன் 

.....வாகு வின்வலி யாலே முவாசையும்       துகளாகி

..வாத னந்தரு மாமா யையாலினி வாடி டுங்கதி வாரா மலேசெயு

.....மாத வன்புகழ் மாதே வதேவசிற்            சபைவாசா



தேனி னின்சொலி தேவா னையோடுபின் கான கந்தரு மாதோ டுமேவிய

.....தேவ ருந்தொழு சேனா பதீயெனும்        இளையோனும்

..தேடி டும்பொருள் தாயோ டுதாதையுள்  ளேயு றைந்திடு மாமே எனாமனம்

.....தேறி யன்றொரு தேமா வையேபெறு      தமையோன்போல்



நானு முன்மக வாமே எனாநினைந் தேயு னன்பையெ லாமே ழைமீதிலும்

......நாத! வந்தினி மேலே னுநீபொழிந்       ததன்மேலும்

..நானி லந்தனில் நாயேன் சதாபிறந் தேஇ றந்திட லாகா தவாறுன

.....நாம மென்னுள மேமே வநீயருள்          புரிவாயே.



(வாரிசம் (வாரிஜம்) = தாமரை; மதாணி= அணி,பதக்கம்; துடி= உடுக்கை; வாகாக= அழகாக; வாகு (பாஹு)= தோள்; வலி= வலிமை; வாதனம்= வருத்தம்; சொலி= சொல்லையுடையவள்; எனா= என; தேறி= தெளிந்து, உறுதிகொண்டு)


இணைப்பு: இசை ஒலிப்பதிவு.


பொருள் விளக்கம்: வானத்திலிருந்து இறங்கிவந்த கங்கை நதியையும், பாதிப்பிறை மதியையும் (சடையில்) சூடிடும் தலைவனே! மனத்துக்கினியவனே! உமையாளுடன் கைலை மலையில் மகிழ்ந்திருக்கும் பரம்பொருளே! உனது தாமரை போன்ற, மிகுந்த ஒளி பொருந்திய மென்மையான திருவடி மலர்மேல், வானுலகில் வசிக்கும் (உன்னை வணங்கிநிற்கும்) தேவர் முதலானவர்களின் கிரீடங்களை ஒரு அணியாகப் பூண்டவனே! மான், மழு, வாள், கொழுந்து விட்டெரியும் தீ, உடுக்கை ஆகியவற்றை அழகாக (திறமையோடு) ஏந்தும் உனது தோள்களின் பலத்தாலே என்னிடமுள்ள மண், பெண், பொன் என்னும் ஆசைகள் தூளாகும்படி நீ செய்து, இனிமேல் நான் என்னை வருத்தும் பெரும் மாயையால்  துன்புற்றுச் சோர்வடையும் நிலையடையாதபடி செய்ய வல்லவனே! பெருந்தவத்தோர் வணங்கும் தேவதேவனே! சிற்றம்பலத்தில் வசிப்பவனே!

தேனினும் இனிய சொல்லாளாகிய தேவயானையையும் காட்டில் உறையும் வள்ளியம்மையோடும் சேர்ந்து நிற்போனும், தேவர்கள் தமது சேனைத்தலைவன் எனத் தொழப்படுபவனுமாகிய உனது இளைய மகனாகிய முருகனையும், தேடற்குரிய யாவும் அன்னை தந்தையரிடமே உள்ளது என்று தன் மனத்தில் உறுதிபூண்டு முன்பொரு வேளையில் இனிக்கும் மாம்பழத்தைப் பெற்ற, முருகனுக்கு அண்ணனாகிய, விநாயகப் பெருமானையும் போல நானும் உனது மகனாவேன் என்று கருதி உன் அன்பை எல்லாம் இந்த எளியவன் மீது பொழிவாயாக. அத்தோடு, இந்தப் புவியில் நான் மீண்டும் மீண்டும் பிறந்து இறக்கும்படியான நிலை வாராமல் செய்ய உனது திருநாமம் என் மனத்துள்ளே நிலைக்கும்படியாகவும் நீ அருள்புரிவாயாக.


அனந்த் 15-11-2013

Friday, November 1, 2013

தவம்

இன்று பிரதோஷ நன்னாள்.


திருச்சிற்றம்பலம்

Inline image 1
                 
<> தவம் <>

கதவம் அடைத்தேன் தனியறையில்
..கண்ணை மூடி அமர்ந்திருந்தேன்
...கையில் முத்தி ரைபிடித்தேன்
.....காற்றை உள்ளே இழுத்தெறிந்தேன்

இதயம் தன்னில் உன்நினைவை
..இறுக்கிப் பிடிக்க இவைபோல
...இன்னும் நூலில் நான்படித்த(து)
.....எல்லாம் செய்து காத்திருந்தேன்

எதுவும் என்னுள் நிகழாமல்
..இருக்கக் கண்டேன் இடிந்துநின்றேன்
...ஈசா! இனிமேல் என்செய்வேன்
.....எனநான் கதறி உருண்டழுதேன்

இதமாய் ஒருகை எனைஎழுப்பி
..இங்கே பாரென் றலும்,ஆகா!
...என்னை இழந்தேன் எல்லையிலா
.....இன்பப் புனலில் ஆழ்ந்தனனே!

.அனந்த் 1-11-2013

(பன்னிருசீர் ஆசிரிய விருத்தம். முன் அரையடி: புளிமா மா காய் மா மா காய்

பின் அரையடி: மா மா காய் மா மா காய்)

படம்:  ஹாமில்டன் (Hamilton) கோவிலில் சிவபெருமான் - நடராஜர் அலங்காரம்)