இன்று பிரதோஷ நன்னாள்.
திருச்சிற்றம்பலம்
<> தவம் <>
கதவம் அடைத்தேன் தனியறையில்
..கண்ணை மூடி அமர்ந்திருந்தேன்
...கையில் முத்தி ரைபிடித்தேன்
.....காற்றை உள்ளே இழுத்தெறிந்தேன்
இதயம் தன்னில் உன்நினைவை
..இறுக்கிப் பிடிக்க இவைபோல
...இன்னும் நூலில் நான்படித்த(து)
.....எல்லாம் செய்து காத்திருந்தேன்
எதுவும் என்னுள் நிகழாமல்
..இருக்கக் கண்டேன் இடிந்துநின்றேன்
...ஈசா! இனிமேல் என்செய்வேன்
.....எனநான் கதறி உருண்டழுதேன்
இதமாய் ஒருகை எனைஎழுப்பி
..இங்கே பாரென் றலும்,ஆகா!
...என்னை இழந்தேன் எல்லையிலா
.....இன்பப் புனலில் ஆழ்ந்தனனே!
.அனந்த் 1-11-2013
(பன்னிருசீர் ஆசிரிய விருத்தம். முன் அரையடி: புளிமா மா காய் மா மா காய்
பின் அரையடி: மா மா காய் மா மா காய்)
படம்: ஹாமில்டன் (Hamilton) கோவிலில் சிவபெருமான் - நடராஜர் அலங்காரம்)
No comments:
Post a Comment