இன்று பிரதோஷ நன்னாள்.
திருச்சிற்றம்பலம்<> தாள் நாட அருள்வாய் <>
சந்தக் குழிப்பு: தானான தான தானான தான தானான தான தனதான
மாயாவி கார காமாதி யாலென் வாணாள்செ லாது முடிபாக
.. மாவேத நூலும் ஈதேயெ னாத வாசாம கோச ரமதான
தூயா!மெய்ஞ் ஞான போதா!மு ராரி வேதாவுந் தேடி யறியாத
..சோணாச லா!நி ராதார மான ரூபா!வி நோத விதமாகப்
பாயாத வாறு கூறான தேவ! பாழான கானி னடமாடும்
..பேயா!க பாலி! ஓடோடு மாடு மேலேறி ஊணை யடைவோயென்
நேயா!வெ னாவுன் நீடாளெந் நாளு மேயான்வி டாத படியாக
..நீதா!இந் நீச னேனாடு மாறு நீதானிந் நாள்வந் தருளாயே!
பதம் பிரித்து:
மாயாவி கார காமா தியால்என் வாழ்நாள்செ லாது, முடிபாக
.. மாவேத நூலும் ஈதே எனாத வாசாம கோச ரம்அதான
தூயா!மெய்ஞ் ஞான போதா!மு ராரி வேதாவும் தேடி அறியாத
..சோணாச லா!நி ராதார மான ரூபா!வி நோத விதமாகப்
பாயாத ஆறு கூறான தேவ! பாழான கானில் நடமாடும்
..பேயா!க பாலி! ஓடோடு மாடு மேலேறி ஊணை அடைவோய்!என்
நேயா!எ னாஉன் நீள்தாள்எந் நாளு மேயான்வி டாத படியாக
..நீதா!இந் நீச னேன்நாடு மாறு நீதான்இந் நாள்வந்(து) அருளாயே!
(வாசாமகோசரம் = வாக்குக்கு எட்டாதது; வேதா = பிரமன்; விநோதம் = அழகு, மகத்துவம், மகிழ்ச்சி; நீதா = நீதிமானே; எனா = என்று)
பொருள் விளக்கம்: மாமறைகளும் இதுதானென்று அறுதியிட்டுக் கூற இயலாதவாறு, வாக்குக்கு எட்டாத தூயவடிவானவனே! மெய்யறிவைப் போதிப்பவனே! மாலும் அயனும் அடி முடி தேடி அறியாத அருணாசலா! தனித்து நிலைத்திருப்பவனே! அழகும் மகத்துவமும் பொருந்தச் சடையில் கங்கையாற்றை ஒரு பகுதியாகக் கொண்டவனே! வெறுமையான சுடுகாட்டில் பேய்களுடன் நடமாடுபவனே! கையில் மண்டையோடு ஏந்தி காளை மேலேறி இரந்துண்பவனே! எனக்கு நன்மை விளைப்பவனே! என்று இவ்வாறெல்லாம் உன்னைத் துதித்து உனது நீண்ட பாதத்தை நாடி, கடையனான நான் அதை என்றும் விடாமல் பற்ற நீ அருள்வாய். நீதியின் உருவானவனே! அதன் பயனாக, மாயையின் விளைவான காமம் முதலான (குரோதம், மதம், மாத்சரியம், உலோபம், மோகம் ஆகிய) தீயகுணங்களால் எனது வாழ்நாள் கழியாமல் காப்பாற்றப்படட்டும்.
.. அனந்த் 1-5-2015
No comments:
Post a Comment