Friday, May 15, 2015

நிகரிலாக் கருணை


                                        <> நிகரிலாக் கருணை <>

                                                        திருச்சிற்றம்பலம்


கோலமாய்ப் பற்பல கோயிலில் அன்பர்கள் குழுமியே குணமு ரைக்கக்
.. கொடுத்திடு வார்மனம் குளிர்ந்துபல் கடவுளர் கோடியாய்க் கண்ட துண்டு

ஓலமும் அழுகையும் ஓங்கிட உறவினர் ஒள்ளெரி தன்னி லிட்டே
.. ஓடிடும் போதினில் ஒருதுணை இன்றியே உயிர்கள்தாம் வாடி டுங்கால்

சீலமில் லாதுதாம் செய்தன நினைந்தவர் திருந்திநல் வழிகி டைக்கத்
.. திருநடம் காட்டிடும் தெய்வமே! உன்நிகர்த் தேவினைக் கண்ட தில்லை

காலனை வென்றதன் கருத்தினை ஐய!நின் கருணையில் கண்டு நின்றேன்
.. காப்பதில் புதியதோர் பாதையைக் காட்டு(ம்)முக் கண்ணுடைக் கடவு ளேறே!

...அனந்த் 15-5-2015
 குறிப்பு: கொடுத்திடு வார்மனம்....கண்ட துண்டு --  ’.... பல்கடவுளர் கோடியாய்; கண்ட துண்டு ’- என்று நிறுத்தக் குறி இட்டுப் படிக்கலாம். பிற கடவுளர்கள் பலரும் தம் அடியவர் துதி கேட்டு, மனம் குளிர்ந்து கோடியாய் அவர்க்கு அளிப்பர் என்பது பொருள்.

(பதினான்குசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம். அரையடி வாய்பாடு: கூவிளம் விளம் விளம் விளம் விளம் மா தேமா)
 

படம்: ஸம்ஹார தாண்டவர் - நன்றி: ”நடராசப் பெருமான்”- திருவாவடுதுறை ஆதீனம் சரசுவதி மகால் நூல்நிலைய ஆய்வு மையம்

No comments: