இன்று பிரதோஷ நன்னாள்
திருச்சிற்றம்பலம்
<> காணிக்கை <>
(14-சீர் விருத்தம். அரையடி வாய்பாடு: தேமா காய் காய் விளம் விளம் மா மா காய் காய் காய் விளம் விளம் மா மா)
மூப்பே இல்லாத காலன்தன் கடமையை
... முற்றிலும் ஆற்றி எனக்கு
..... முதுமைநிலை தந்தெனது வசமுள்ள யாவையும்
........ மொத்தமாய்ப் பறித்த பிறகு
தோப்பாய் இருந்தவனோர் தனிமரமாய் ஆனபின்
... சொந்தமென்(று) இயம்ப என்னைத்
.... தொத்தியுள நோயோடு தொல்லைவிளை மனம்இவை
..... தொடருமிந் நிலையில், அரனே!
காப்பாய் எனஉன்றன் கழல்நீழல் வந்துளேன்
..... கடையனின் காணிக் கையாய்க்
......கைவசம்என் னிடமுள்ள அகந்தையினைத் தருகிறேன்
..... கருணைகூர்ந் தேற்பை யானால்
பார்ப்போர் பாவியையும் பாலிக்கும் உன்னருட்
....பாங்கினைப் போற்று வாரே
.... பத்தியுடன் எறிந்தவொரு கல்லினையும் பூவெனப்
.... பரிவுடன் ஏற்ற பரமே!
.. அனந்த் 25-10-2015