திருச்சிற்றம்பலம்
<> எப்படிச் செய்வேன்? <>
அருகிருக்கும் அன்னைமுகம் அரைவிழியால் நோக்கியவா(று)
.. ஐயனவன் தில்லைச்சிற் றம்பலத்தில் ஆடுமந்த
பெருமெழிலைப் பருகிவந்(து)உன் றனுக்களிக்க வைத்தனன்நான்
.. பின்னர் இருசெவிகளையும் பிறையணியும் பெம்மானின்
திருவைவிரித்(து) அடியர்சொலும் துதிகளெல்லாம் கேட்கவைத்தேன்
.. தேனாகத் தித்திக்கும் தேவனின்பேர் ஆயிரத்தின்
உருசியெலாம் உனக்குரைக்க நாவினுக்கோர் ஆணையிட்டேன்
… உனக்கெனநான் செய்தபல உதவிகளை ஒருசிறிதும்
மதியாமல் உதறியுன்றன் மதம்பிடித்த போக்கினைநீ
.. மாற்றாமல் உன்னிழிய வழியினிலே சென்றெனக்கோர்
எதிரியென என்றுமெனை வாட்டுகின்ற என்மனமே!
.. எவ்வகையில், எதைக்கொண்(டு)இவ் ஏழைநான் உன்னுணர்வைச்
சதிர்பயிலும் ஐயனின்பால் சாரவைத்துப் பிறப்பிறப்புச்
.. சகதியிலே சந்ததமும் சலியாமல் அளைந்திடும்உன்
கதியிதனை மாற்றியந்தக் கைலைமலை இறைவனையோர்
… கணமேனும் உள்வாங்கிக் கசிந்துருகச் செய்வேனோ?
அனந்த் 31-7-2016