திருச்சிற்றம்பலம்
<> கொடை வள்ளல் <>
கண்கொடுத்தாற்(கு) அடிகொடுத்தான் கான்மாக்குக் கைகொடுத்தான்
பெண்கொடுத்த மாமனுக்குத் தலைகொடுத்தான் பேய்க்(கு)அன்று
விண்கொடுத்தான்; கிழவிக்கு மண்,மன்னற்(கு) அடிகொடுத்தான்;
பண்கொடுத்தான் பத்தர்க்குப் பாடுமெனக்(கு) என்கொடுப்பான்?
பொருள் விளக்கம்: தனது கண்ணை இடந்து அப்பிய கண்ணப்பனுக்குச் சிவபெருமான் தன் பாதத்தைத் (சிவபதத்தைத்) தந்தருளினான்; காட்டில் வதியும் மானுக்கு கையில் ஏந்தி இடங்கொடுத்தான்; மாமனாராகிய தக்ஷனின் தலையை வீரபத்திரர் கொய்தபின் மாற்றாக அவருக்கு ஆட்டின் தலையைத் தந்தான்; பேயுருத் தாங்கிய காரைக்காலம்மைக்குக் கயிலாயப் பதவி தந்தான்; வந்திக் கிழவிக்கு மண்ணை (வைகையாற்றில் கொட்டிக்) கொடுத்தான்; தன்னைப் பிரம்பால் அடிக்க வந்த பாண்டியனுக்கு அந்த அடியைத் திருப்பி அவனுக்கே கொடுத்தான்; சேக்கிழார், சுந்தரர், முத்துத்தாண்டவர், போன்றோர்க்குப் பாடலின் முதற்சொல்லை எடுத்துக்கொடுத்தான்; அன்னாருடைய திருப்பாடல்களைப்) பாடிப் பணியும் எனக்கு என்ன தருவானோ?
{அடி = பாதம், அடித் தண்டனை; கைகொடுத்தான் என்பதற்கு, கைகொடுத்து உதவினான் என்றும், தலைகொடுத்தான் என்பதற்குத் தலைமை (பதவி) தந்தான் என்றும் சிலேடையாகப் பொருளும் கொள்ளலாம்.}
..அனந்த் 2-7-2016
No comments:
Post a Comment