Wednesday, September 28, 2016

உணர்வு

                                            திருச்சிற்றம்பலம்
    
                                                <> உணர்வு <>

                                              
                                

என்னை உற்றுப் பாரென்றான் எழிலார் கோலக் கொள்ளையிலே
… என்றன் கண்ணோ(டு) இதரபுலன் எல்லாம் நிலைக்கத் தொடங்கையிலே

மின்னல் வேகத் தில்மறைந்தான் வாதை நெஞ்சில் பரவுகையில்   
… விண்ணும் மண்ணும் விரிந்தவொரு வெளியில் நடனக் காட்சியினை                                                                                                                                     
உன்ன வைத்தான் இனியிதனை உன்னுள் ளேநீ பாரென்றான்
… உள்ளே சென்றேன் பின்அதற்கும் உள்ளே செல்லென் றாணையிட்டான்

அன்ன வண்ணம் செல்கையிலே அனைத்தும் இழந்தேன் அதனையடுத்(து)
… அவனே நானாய் ஆகுமுனம் ஐயோ! கனவு கலைந்ததுவே!

… அனந்த்  29-6-2016 

Wednesday, September 14, 2016

நாடல்

            திருச்சிற்றம்பலம்  
        
             <> நாடல் <>

 Inline image 1

ஒளியை உமிழும் வெண்மதியும்
… உலவும் புனலும் சடைநாட

நெளியும் மின்ன லனையரவம்
.. நிமிர்ந்த மார்பம் தனைநாட

அளியின் உருவாம் அன்னையவள்
.. ஆகத் தரைப்பங் கினைநாட

எளியன் அரனுன் இணையடியை
.. என்பங் கெனவே நாடுவனே.

(அனை அரவம் = அனைய அரவம்; மார்பம் = மார்பு; அளி = கருணை; ஆகத்தரை = ஆகத்து அரை; மேனியில் பாதி)

                                              ******
                     <> மேலோன் <>

 Inline image 2

சடையும் அதன்மேலொரு மலரும்
… சலமும் அதன்மேலொளிர் மதியும்

உடையும் அதன்மேல்நெளி அரவும்
.. உடலும் அதன்மேலுறை உமையும்

விடையும் அதன்மேலமர் எழிலும்
.. விரவும் அரன்மேலொரு பரிவை

உடையோர் அவர்மேல்வளர் உறவும் 
.. உறுமின் அதன்மேலெதும் இலையே.
 
அனந்த்
14-9-2016