Monday, April 24, 2017

எல்லையிலா அருள்

இன்று சோமவார ப்ரதோஷச் சிறப்பு நன்னாள்.

திருச்சிற்றம்பலம்


<> எல்லையிலா அருள் <>


எங்கோ தொலைவில் உளன்என்னா(து)
இறையே! என்றன் கைப்பற்றி 
மங்காப் புகழ்சேர் தலங்களுக்கு
... 
வலியக் கூட்டிச் சென்றாங்குன்
தங்கச் சுடராம் திருவுருவைத்
.. 
தரிசித் திடநீ வைத்திட்டாய்
மங்கை உடன்ஓர் விடைமீதூர்
.. 
மன்னே! உன்றன் அருளென்னே!

கடலைத் தாண்டி வந்தெனது
.. கொடுமைப் பிறவிக் கடல்கடந்து
விடவோர் வழிசித் சபைநடுவே
.. வேதப் பொருளின் விளக்கமென
நடனம் புரியும் நாதன்தாள்
.. நாடல் எனஅப் பதியிலவன்
உடல்தொட் டிறைஞ்சும் பெரியரெமக்(கு)
.. உணர்த்தச் செய்த உதவியென்னே! 

ஏதும் அறியா மூடனென்றன்
.. இதயக் குப்பைக் கூடையிலே 
சூதும் வாதும் துர்நினைவும்
.. சுமந்துன் வாயில் வந்தவுடன்
வாது செய்யா தென்னையும்நீ
.. வருவாய் எனவே அழைத்துன்பால்
காதல் பெருக வைத்தவுன்றன்
.. கருணைக் கிணையைக் கண்டிலனே.

எங்கோன் எனவும் எழிலாரும்
.. 
இடத்தாள் தூக்கி எனவுமுனைக்                                  கங்குல் பகலாய் நினைவிருத்திக்
.. 
கழறும் அடியார் நடுவிலெனைத்
தங்க வைத்துத் தாய்தனது
.. 
சவலைக் குழவி தனைநோக்கும்
இங்கி தத்தோ(டு) எனைக்காத்தாய்
.. 
ஈசா! உன்றன் பரிவென்னே!














அங்கி யுருவில் சலனமில்லா
.. ஆன்மச் சொருபம் நம்முள்ளே
தங்கும் உண்மை எனஉரைக்கும்
.. தலமாம் அருணை தனிலென்றும்
மங்கா தொளிரும் ரமணகுரு
.. மகிமை தன்னில் மூழ்கவைத்து
அங்கே உன்றன் ஆலயத்தை
.. அடியேன் காண வைத்ததென்னே!


Inline image 2

எங்கும் சைவம் பரவுவண்ணம்
.. இசையோ டுன்சீர் புகழ்குரவர்
தங்கிச் சிறந்த மாமதுரைத்
.. தலத்தில் என்றன் சிறுவயதில்
மங்கை மீனா ளுடன்றன்
.. வடிவைக் காட்டி ஆட்கொண்டாய்
அங்கே மீண்டும் வரவழைத்துன்
.. அழகைப் பருகச் செய்ததென்னே!
 
இடரைக் களைய வேண்டிடின்இவ்
.. இறைவற் கிணையிங் கில்லைஎனுந்
திடங்கொண் டிலிங்க வடிவிலுனைச்
.. சேவிக் கரகு வரன்தேர்ந்த
இடமாம் இராமேச் சரம்தன்னை
.. எளியேன் மீண்டும் தரிசிக்கப்
படமார் சடையாய்! வாய்ப்பளித்த
.. பரிவில் நெஞ்சம் உருகினனே.
         
அங்கம் தளர்ந்து வலுவுமிழந்(து)
.. 
அடியேன் காலம் முடிகையில்என்
பங்கிற்(கு) உன்றன் திருநாமம்
.. 
பகர ஆற்றா அந்நிலையில்
 
இங்கே உள்ளேன் என்றுனையென்
.. 
இதயந் தனிலே காட்டிஎரி
பொங்கும் காட்டில் நீநடனம்
.. 
புரியும் அழகைக் காட்டுவையோ?

(குறிப்பு: அண்மையில் நான் தரிசித்தத் திருத்தலங்களை நினைவு கூரும் வண்ணம் யாத்த பாடல் இது. சிதம்பரத்தில் ஆருத்திரா தரிசன விழா நாட்களில் இருக்கும் பேறும்,  திருவண்ணாமலையில் பகவான் ஶ்ரீரமணரின்  ஜயந்தித் திருநாள், அருணாசலேசுவரர் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழாக் காலத்தில் இருக்கும் பாக்கியமும் கிட்டியது)

அனந்த் 23-4-2017

Saturday, April 8, 2017

அருளுவது எந்நாளோ?

                           திருச்சிற்றம்பலம்
                    <> அருளுவது எந்நாளோ? <>
     
​   
அன்னம் அளிக்க ஒருபெண்நீர் அளிக்கத் தலையில் மற்றொருபெண்
இன்னும் பசித்தால் இரந்துண்ண ஏற்றிச் செல்ல ஒருமாடு
பின்னர் மரத்தின் அடியிலொரு  பேச்சும் இன்றி அமர்ந்தடியார்
முன்னம் நிற்கும் இவன்தோற்றம் முரணே அன்றி அரணாமோ?         1

அரண்சூழ் மனையில் அமர்ந்துயர்ந்த ஆடை அணிகள் பூணாமல்
தரணி விரும்பா இடுகாட்டில் தனியே ஆடும் தலைவன்இவன்
முரணில் மோகம் கொண்(டு)அவன்சீர் மொழிந்து விரையார் தாளிணையே
சரணம் எனநாம் சார்ந்திட்டால் சரிந்து மாயும் நம்வினையே.              2

வினைகள் ஐந்தைப் புரிந்தவண்ணம் விந்தை நடமொன் றாடிநின்றே
எனைப்போல் அடியார் தமைக்காக்கும் ஏவல் தனையும் முடித்திடுவான்
தனையே எமக்குத் தந்துதவும் தலைவன் என்று திகழுமிவன்
அனைய இறைமற் றெவருளரே அடைய விரைவீர் இவனருளே.           3

இவனே நம்முள் இருந்தியக்கும் இச்சா கிரியா ஞானமுமாய்
அவற்றின் வழிநம் முள்அவனை அறியச் செய்வான் அதன்பின்னர்
அவனே நாமென் றுணர்கின்ற அத்து வைத நிலைநிறுத்திப்
பவமாம் நோயின் பிடிவிலக்கிப் பரமாம் சிவத்துளுறையவைப்பான்   4

உறையும் பனிசூழ் மலையினிலே உமையோ டுறையும் இறையிவனை
மறையும் விரிக்க இயலாமல் மயங்கிக் கரத்தை விரிக்கையிலே
மறைவாய் வில்வத் திரையின்பின் வடிவில்லாஅச் சித்பொருளே
பறைகள் முழங்க நடமாடிப் பக்தர்க் களிப்பான் தண்ணருளே.           5

அருளே! அமுதே! அகத்தடியில் அணையா தெரியும் மணிவிளக்கே!
இருளார் மயக்கில் இருந்தேனுக் கிதுவே வழியென் றெனைஉண்மைப்
பொருளைக் காண வாய்ப்பளித்தாய் புன்மைச் சிறியேன் பவச்சுழலில்
உருளேன் உன்னை உள்ளில்வைத்(து) உறுவேன் இனியான் பரகதியே 6

பரமா! பலரைப் பரிவோடு பாலப் பருவம் முதலாக
அரவ ணைத்துன் அருகில்வர அழைத்துன் பேராம் அமுதையவர்
சிரம்உன் கரத்தில் ஏந்தியிட்டாய் சிவனே காப்பாய் என்றிங்கே
அரவம் எழுப்பும் அடியேனுக்(கு)  அருளற் கொருநாள் குறியாயோ?  7

குறிப்புக் காட்டி ஆலடியில் குரவர்க் குண்மைப் பொருளையவர்
அறியும் வண்ணம் ஆதரித்த ஐயே! எனையும் பொருளாக்கி
வறிதே உலகில் வாடாத வகையைக் காட்டிப் பரஞான
நெறிசேர்த் தருளும் நாளுக்கென் நெஞ்சம் ஏங்குவ தறியாயோ?  8

நெஞ்சென் றும்உள் மனமென்றும் நிகழ்வு நனவு கனவென்றும்
கொஞ்ச மேனும் ஓய்வின்றிக் கூச்சல் எழுப்பும் என்னகந்தை
வஞ்சம் புரிந்து நானுன்றன் வடிவே என்னும் மெய்யையறிந்(து)
உஞ்சும் வழியை அடைத்துநிற்றல் உன்னால் உணர இயலாதோ? 9

இயலா தென்றிவ் வேழைநிதம் இயம்பி உன்னை என்னிலிருந்(து)
அயலாய்க் காண வைத்ததுமிங்(கு) யாதென்  றறியேன் அம்பலத்தில்
இயலோ டிசைக்கும் கூத்தினுக்கும் இறையாய் விளங்கும் உன்றன்மேல்
மயல்கொள் வதலால் வேறெந்த வழியும்  அறியேன் என்அன்னே! 10

..அனந்த் 8-4-2017