Saturday, April 8, 2017

அருளுவது எந்நாளோ?

                           திருச்சிற்றம்பலம்
                    <> அருளுவது எந்நாளோ? <>
     
​   
அன்னம் அளிக்க ஒருபெண்நீர் அளிக்கத் தலையில் மற்றொருபெண்
இன்னும் பசித்தால் இரந்துண்ண ஏற்றிச் செல்ல ஒருமாடு
பின்னர் மரத்தின் அடியிலொரு  பேச்சும் இன்றி அமர்ந்தடியார்
முன்னம் நிற்கும் இவன்தோற்றம் முரணே அன்றி அரணாமோ?         1

அரண்சூழ் மனையில் அமர்ந்துயர்ந்த ஆடை அணிகள் பூணாமல்
தரணி விரும்பா இடுகாட்டில் தனியே ஆடும் தலைவன்இவன்
முரணில் மோகம் கொண்(டு)அவன்சீர் மொழிந்து விரையார் தாளிணையே
சரணம் எனநாம் சார்ந்திட்டால் சரிந்து மாயும் நம்வினையே.              2

வினைகள் ஐந்தைப் புரிந்தவண்ணம் விந்தை நடமொன் றாடிநின்றே
எனைப்போல் அடியார் தமைக்காக்கும் ஏவல் தனையும் முடித்திடுவான்
தனையே எமக்குத் தந்துதவும் தலைவன் என்று திகழுமிவன்
அனைய இறைமற் றெவருளரே அடைய விரைவீர் இவனருளே.           3

இவனே நம்முள் இருந்தியக்கும் இச்சா கிரியா ஞானமுமாய்
அவற்றின் வழிநம் முள்அவனை அறியச் செய்வான் அதன்பின்னர்
அவனே நாமென் றுணர்கின்ற அத்து வைத நிலைநிறுத்திப்
பவமாம் நோயின் பிடிவிலக்கிப் பரமாம் சிவத்துளுறையவைப்பான்   4

உறையும் பனிசூழ் மலையினிலே உமையோ டுறையும் இறையிவனை
மறையும் விரிக்க இயலாமல் மயங்கிக் கரத்தை விரிக்கையிலே
மறைவாய் வில்வத் திரையின்பின் வடிவில்லாஅச் சித்பொருளே
பறைகள் முழங்க நடமாடிப் பக்தர்க் களிப்பான் தண்ணருளே.           5

அருளே! அமுதே! அகத்தடியில் அணையா தெரியும் மணிவிளக்கே!
இருளார் மயக்கில் இருந்தேனுக் கிதுவே வழியென் றெனைஉண்மைப்
பொருளைக் காண வாய்ப்பளித்தாய் புன்மைச் சிறியேன் பவச்சுழலில்
உருளேன் உன்னை உள்ளில்வைத்(து) உறுவேன் இனியான் பரகதியே 6

பரமா! பலரைப் பரிவோடு பாலப் பருவம் முதலாக
அரவ ணைத்துன் அருகில்வர அழைத்துன் பேராம் அமுதையவர்
சிரம்உன் கரத்தில் ஏந்தியிட்டாய் சிவனே காப்பாய் என்றிங்கே
அரவம் எழுப்பும் அடியேனுக்(கு)  அருளற் கொருநாள் குறியாயோ?  7

குறிப்புக் காட்டி ஆலடியில் குரவர்க் குண்மைப் பொருளையவர்
அறியும் வண்ணம் ஆதரித்த ஐயே! எனையும் பொருளாக்கி
வறிதே உலகில் வாடாத வகையைக் காட்டிப் பரஞான
நெறிசேர்த் தருளும் நாளுக்கென் நெஞ்சம் ஏங்குவ தறியாயோ?  8

நெஞ்சென் றும்உள் மனமென்றும் நிகழ்வு நனவு கனவென்றும்
கொஞ்ச மேனும் ஓய்வின்றிக் கூச்சல் எழுப்பும் என்னகந்தை
வஞ்சம் புரிந்து நானுன்றன் வடிவே என்னும் மெய்யையறிந்(து)
உஞ்சும் வழியை அடைத்துநிற்றல் உன்னால் உணர இயலாதோ? 9

இயலா தென்றிவ் வேழைநிதம் இயம்பி உன்னை என்னிலிருந்(து)
அயலாய்க் காண வைத்ததுமிங்(கு) யாதென்  றறியேன் அம்பலத்தில்
இயலோ டிசைக்கும் கூத்தினுக்கும் இறையாய் விளங்கும் உன்றன்மேல்
மயல்கொள் வதலால் வேறெந்த வழியும்  அறியேன் என்அன்னே! 10

..அனந்த் 8-4-2017

No comments: