இன்று பிரதோஷ நன்னாள்.
திருச்சிற்றம்பலம்
<> தொலைவு உளதோ? <>
கடவுளை நீங்கள் அடைவதற்குக்
.. காண்பீர் இதுவோர் வழிஎன்பார்
கடந்து செல்லத் தொலைவின்றிக்
.. கணமும் பிரியா வணமாய்என்
உடனி ருக்கும் நடத்தரசை
.. ஒன்றத் தொலைவென் றேதுளது?
கடல்மீன் தாகத் தால்வாடக்
.. கண்டார் உளரோ சொல்வீரே!**
******
கல்லி னுள்ளே மரத்துள்ளே
.. கடலுள் ஐந்து பூதத்துள்
எல்லாப் பொருள்கள் தம்முள்ளும்
.. இயல்பாய் நிற்கும் பேருணர்வு,
நல்லோர் உள்ளக் குகையினுள்ளே
.. நாளும் ஒளிரும் விளக்(கு)இங்கே
தில்லைப் பதியின் நாயகனாய்த்
.. திகழும் அழகைக் காண்பீரே.
******
வில்வம் திகழும் அணிசடையில்
.. வீழும் புனலும் நிலவொளியும்
சொல்லற் கரிய எழில்பொதிந்த
..சுடர்செம் பவளத் திருமுகத்தில்
மெல்ல அரும்பும் புன்னகையும்
.. வேதத் தொலியாய்க் காலெழுப்பும்
சல்சல் ஒலியும் சேரநமைச்
.. சேர்ப்பான் மெய்ம்மைச் சிவத்துள்ளே.
(** இந்தஉவமை பரமஹம்ஸ யோகானந்தா அவர்களின் ஆங்கில உரையொன்றில் கண்டது.)