திருச்சிற்றம்பலம்
<> பூத உடல் <>
நீரில் மிதந்து கருவாகி
.. நிலத்தில் விழுந்து காற்றிழுத்துப்
பாரில் திரிந்து பல்லோரும்
.. பாவி யென்னும் படியாய்வாழ்ந்(து)
ஊரின் வெளியே தீயில்புகும்
.. உடலம் இதனைக் கொண்டுன்னை
நேரில் காணல் எனும்விந்தை
.. நிகழ வைத்தல் நின்கடனே
எல்லாம் அறிந்த வல்லோன்நீ
.. எனக்கோர் உடலம் தந்தசெயற்
குள்ளே ஒளிந்த காரணத்தை
.. உணரா திருந்திந் நாள்வரையில்
பொல்லா நினைப்போ(டு) உரை,செயலைப்
.. புரிந்து வந்தோன் எனஅறிந்தும்
நல்லோய் எனையும் நின்னடியை
.. நாட வைத்தல் நின்கடனே
குழியில் விழுந்து தவிப்பவனின்
.. கூச்சல் கேட்டுக் கைதரல்போல்
அழிவை நோக்கி விரையுமென்னை
.. அன்பின் வடிவே நீதடுத்துன்
எழிலைக் காட்டி ஈர்த்துன்றன்
.. இணையடி தன்னைச் சார்வதற்கு
வழியைக் குறித்துன் அடியவனாய்
.. வாழ வைத்தல் நின்கடனே.
காற்றும் நீரும் நெருப்புமிவன்
.. கயவன் நல்லோன் எனப்பாரா(து)
ஊற்றம் தருமாப் போலாகும்
.. உன்றன் கருணை எனப்பெரியோர்
சாற்றல் கேட்(டு)இன்(று) உன்கமலச்
.. சரணம் நாடி வந்தேனைத்
தூற்றா தென்றன் மனமாசைத்
.. தொலைத்துக் காட்டல் நின்கடனே
நாட்டம் எல்லாம் என்றனுக்கு
.. நலிவைக் கொடுக்கும் நினைவுகளில்
தேட்டம் எல்லாம் என்றனுக்குச்
.. சீரைக் கெடுக்கும் செல்வத்தில்
வாட்ட மடைந்தேன் இவற்றாலே
.. வழியொன் றிதுவென் றுன்னடியார்
கூட்டம் சொல்கேட்(டு) உன்முன்கை
.. கூப்பி நின்றேன் ஏற்பாயே.
(காற்றிழுத்து - காற்றைச் சுவாசித்து)
.. அனந்த்
பிரதோஷ நன்னாள் - 2/3-10-2017
No comments:
Post a Comment