Thursday, April 26, 2018

ஆட்கொண்ட வகை

இன்று பிரதோஷ நன்னாள்.
திருச்சிற்றம்பலம்


                   <> ஆட்கொண்ட வகை <>

இல்லையினி மேலுமொரு இறைவடிவ மெனும்வகையில்
பல்வேறு தெய்வங்கள் பால்நாடிச் சென்றவனைச்
சொல்லாலே எதனையுமே துலக்காமல் ண்மூடிக்
கல்லாலின் கீழிருக்கும் கடவுளுன்பால் இழுத்துவந்தாய்.

கரும்பதுதன் சுவையாலே கட்டெறும்பைக் கவர்வதுபோல்
இரும்பினைத்தன் ஆற்றலினால் காந்தம்அரு(கு) ஈர்ப்பதுபோல்
துரும்பினும்கீழ்ப் பட்டபெருந் துட்டனெனைத் தொலைவிலுள்ள
பெரும்புலியூர் பொன்னவைக்குப் போகவைத்து விழுங்கிவிட்டாய்

கண்ணின்நீ ரருவியிலுன் காலிணையை நீராட்டி
வெண்ணீற்றுப் பூச்சாலுன் மேனியைநான் எழில்படுத்தி
உண்ணெக்கு நின்றுருகி உளறலெலாம் தோத்திரமாய்ப்
பண்ணினின்றிப் பாடியுனைப் பரவவைத்தும் பார்த்தனையே


அனந்த் 27-4-2018  -  பிரதோஷ நன்னாள்.

Friday, April 13, 2018

குடி வைத்தாய்

          திருச்சிற்றம்பலம்

         <> குடி வைத்தாய் <> 




பெண்ணொன்று தந்தவன் பெருவரை முடியில்நீ
.. பீடுடன் வீற்ற பின்னோர்
பெண்ணையுன் முடியிலே குடிகொள வைத்(து)அவள்
…… பேரிலோர் கவனம் வைக்கக்

கண்ணொன்று நெற்றியில் கரந்துநீ வைத்ததன்
… கருத்தினை அறிந்தி டாமல்
…. காயத்தில் பாதியைக் கொண்டவுன் பாரியாள்
…… கடுஞ்சினங் கொண்ட தாலே

விண்ணொன்று கூரையாய் வெண்டலை ஓட்டுடன்
..  வீதியில் நடக்க வைத்த
…. வேதனை தீரவோ விரிகிளை தருவடி
…… வீற்றுவே தாந்தி யானாய்?

பண்ணொன்று பாடியே பகடிநான் செய்யினும்
… பரிந்தெனை ஏற்குமுன்றன்
…. பாதத்தின் கீழிலென் பிழையெலாம் போக்கிடப்
…… பரமநான் குடிகொள்வனே.

(பகடி = பரிகாசம், விகடம், கூத்து.) 
அனந்த் 13-4-2018 பிரதோஷ நன்னாள்