திருச்சிற்றம்பலம்
<> இடம் கொண்டான் <>
உண்டவிடம் கண்டத்தில் ஒட்டிநிற்க உம்அரையை
மண்டிவிடப் பாம்பொன்று சுற்றிநிற்க – உண்டியைக்
கண்டவிடம் ஓடிப்போய்க் கையேந்தும் உம்மைநான்
கொண்டவிடம் உள்ளக் குகை. 1
குகனுக்குத் தந்தையெனக் கொண்டாடும் நீரோ
மகன்முன்னே மண்டி யிடுவீர் – அகத்தில்
இருபெண்டிர் கொள்ளுவீர் ஏதேனும் சொன்னால்
தருவடியில் மௌனியா வீர். 2
வீரத்தைக் காட்டுதற்கு வில்லோடு வேட்டைக்குத்
தாரத்தைக் கூட்டித் தருக்கோடு – சேருவீர்
காட்டை;அங்குப் பார்த்தன்கைக் காண்டீபத் தாலடிக்கக்
காட்டுவீர் உம்தலையைச் சாய்த்து. 3
பன்றிமேல் நீர்வைத்த பற்றினால் கொண்டஅடி
ஒன்றுபோ தாதெனவோர் கூலியாய்ச் - சென்றடி
பட்டவிடம் நோவுதென்பீர் பாரோரெல் லாம்அடி
பட்டங்கே ஓலமிடும் போது. 4
காட்டில்வே டற்கெனக் கண்ணில்புண் கொள்ளுவீர்
நாட்டார் நகைக்கவோர் நக்கனுமாய்க் – காட்சி
தருவீர் இவைதெரிந்தும் சார்வார் அடியார்
குருதமக்(கு) என்றும்மைக் கொண்டு. 5
இடங்கொடுத்தான் மாமன் குடியிருக்க* என்றோர்
இடங்கொடுத்தீர் பெண்ணுக்(கு) இடத்தை** – இடங்கொடுத்தீர்
பெண்ணுக்குப் #பேரளவில் என்றுலகோர் கூறுவர்உம்
கண்ணுக்கு முன்னே கரித்து. 6
(*இமவான் தன் மலையில் வசிக்க இடங்கொடுத்ததைச் சுட்டியது;
**இடத்தை = இடது பாகத்தை; #பேரளவில்= பெருமளவில், பேருக்கு மட்டுமாக)
பெண்கொடுத் திடம்கொடுத்தான் பேரரையன் என்பதனால்
மண்சொல்லும் நீர்கொடுத்து வைத்ததாய்க் – கண்ணனைய
பெண்ணுக்கு நீரும்தான் பேணி இடம்கொடுத்தும்
மண்ணிலிரந் துண்ணல்உம் வாழ்வு. 7
இடம்கொடுத்த காரணத்தால் ஈச!நின் மனையாள்
விடங்கெடுக்கா(து) உம்மையன்று மீட்டாள் – கொடிய
எமனைத்தன் கால்தூக்கி எற்றியுனை ஊரார்
தமதிறையாய்க் கொள்ளவைத் தாள். 8
கள்ளவிடம் என்றும் கலம்கல மாய்நிறைந்
துள்ளவிட மாமென்றன் உள்ளத்தைத்– தெள்ளமுதம்
துள்ளுமிட மாக்கியென்றன் தூசறுத்தோன் கால்தூக்கித்
துள்ளுமிடம் தில்லைமட மே. 9
இடம்பொருள் காலம் எனுமெல்லை யாவுங்
கடந்த ககனத்தில் ஞானச் – சுடராய்
நடஞ்செய்யும் நாதன் நமக்கெனத் தில்லை
இடங்கொண்டான் ஈதே அருள். 10.
... அனந்த் 8-8-2018
(கானடாவில் இன்று (8th) பிரதோஷம்)
No comments:
Post a Comment