Sunday, February 17, 2019

என் பரிபவம்

                                        திருச்சிற்றம்பலம்


              


                                       <> என் பரிபவம் <>


நாட்டார் வியந்திட நாற்கவி புனையலாம் நானிலம் பவனிவரலாம்
நற்றுணை சேர்க்கலாம் நவநவ சித்திகள் ன்குகை வரல்நிகழலாம்

சேட்டை புரிந்திடும் சிந்தையைத் தேக்கியுன் திருவடி யிணைநிலைத்திடச்
.. செய்வதின் மேலொரு திறனெதும் இல்லையே தில்லையில் கனகசபையில்

ஆட்டை நிறுத்திடா வண்ணமாய் ஐந்தொழில் அழகுறப் புரியுமையனே
அன்னையும் நீயுமாய் அடங்கிடா தலையுமென் மனத்தினால் அடியனேன்படும்

பாட்டைக் கண்டிவன் நமதுசேய் எனும்அருட் பார்வையைப் பதித்திடுவையேல்
பட்டென அந்தவோர் கணத்திலென் பரிபவம் யாவுமே பறந்தொழியுமே.

(ஆட்டை = ஆட்டத்தை; பரிபவம் = இழிவு; கவலை, அவமானம்;
பன்னிருசீர் ஆசிரிய விருத்தம். தே/புளிமா விளம் விளம் விளம் விளம் கருவிளங்கனி)

அனந்த் 17-2-2019 (பிரதோஷம்)

Friday, February 1, 2019

என்னை மயக்கியோன்

திருச்சிற்றம்பலம்




















<>  என்னை மயக்கியோன்  <>   
   
படியா திருந்தேன் பரமநின்றன்
.. பாங்கைப் பலவாய்ப் பரிந்துரைத்த
அடியார் சொலையும் அலட்சியஞ்செய்(து)
.. அடியேன் இருந்த அவ்வேளை
துடியார் கரமும் அழற்கரமும்
… தூக்கிய பதமும் காணவைத்துன்
வடிவார் நடத்தில் மயக்கிஎனை
.. வரித்த கருணைக் கிலையிணையே.


புரிதற் கரிய பூரணமே
… புன்மை யேனுன் புகழுரைக்க
உரிய நலங்கள் ஒன்றேனும்
… உடையேன் அல்லன் எனவறிந்தும்
பரிவோ டுன்றன் பதமலரைப்
… பார்க்கும் வாய்ப்பை நல்கினைநீ
நரியைப் பரியாய் மாற்றியபின்
.. நடந்த கதைபோல் இதுவாமோ*?  

(*மாணிக்க வாசகருக்காக இறைவன் நிகழ்த்திய திருவிளையாடலில்குதிரைகளாக மாற்றப்பட்ட நரிகள் மீண்டும் தம் சுயஉருவைக் கொண்டதைச் சுட்டியது.)

இனிநமைப் பிரியா னெனஎண்ணி
.. இறுமாப் பில்நான் திளைக்குங்கால்
தனிமையில் என்னைத் தவிக்கவிட்டுச்
.. சாலத் தொலைவில் மறைந்திடுவாய்
எனைநீ இதுபோல் அலைக்கழித்தல்
.. னோ எனநான் அழுகையிலே
பனிமலை உறைவோய்! மனமிளகிப் 
.. பரிந்தென் னுள்ளே புகுவாயே.

என்னுள் நீநின் றாயேல்நான்
.. உன்னுள் உளனாய் ஆவேனென்(று)
உன்னும் போதில் உவகையெனும்
.. ஓதத் தில்நான் மிதந்திடுவேன்
என்கண் மணியே! என்னுயிரே!
.. எல்லை யில்லாப் பெருவெளியாம்
பொன்னம் பலத்துப் பொன்னே!என்
.. பொல்லா இறையே! பூரணமே!.

அனந்த் 2-2-2019 (சனிப்பிரதோஷச் சிறப்பு நன்னாள்.)