திருச்சிற்றம்பலம்
<> அழல் <>
கையில் அழலுன்றன் கண்ணில் அழல்முன்னம்
மைவண்ணன் வேத னறியவொண்ணாச் – செய்ய
அழற்பிழம்பாய் நின்றோய்! அவதியுறும் என்றன்
அழலேற் றருளாத தேன்?
(அழல் = அழுதல்; உள்ளத் தாபம், வெப்பம்)
<> சிதை <>
தாற்கா லிகமாய்நீ தந்த உடலிதனை
மேற்கொண்டேன் உன்றன்
விருப்பம்போல் – நாற்புறமும்
தீச்சூழ ஓர்நாள் சிதையிலது
வீழுமுன்என்
நாச்சூழ உன்நாமம் நாட்டு.
(சூழல் = சுற்றியிருத்தல், கருதுதல்)
<> படை <>
அடைக்கும் கழிவும் அழுக்குடன் கூடி
அருநரகாய்க்
கிடக்கும் எனதுளக் கேணியில் மண்டிடும்
கேடுகளைத்
துடைத்துப் பளிச்செனத் துப்புர வாக்கியுள் தூரெடுக்கப்
படைத்தான் எனக்கரன் பஞ்சாக் கரமாம் படையினையே.
(தூர் = கலங்கல் நீர், சேறு, மண்டி, வண்டல்…; படை = கருவி, ஆயுதம்)
... அனந்த் 30-5-2019 பிரதோஷ நன்னாள்