திருச்சிற்றம்பலம்
<>
உன் பாடு <>
நீதி பயிலாத நீசன்என்மேற் கோபமுறல்
நாத! நியாயம்
நினக்காமோ? – ஏதம்விளை
யாதுநான் செய்யினும் ஆங்கதனை ஏற்றுன்றன்
பாதம் வழங்கல்உன் பாடு.
ஏதம் புரிவோர் அதன்விளைவை ஏற்றலே
நீதியாம் என்றொருகால் நீவிளம்பின் – வாதிற்கு
வாதவூர் ஐயனின் வாக்கை*யான் காட்டியுன்றன்
பாத(ம்)விழு வேன்பின்னுன் பாடு!
(”நன்றே செய்வாய் பிழைசெய்வாய் நானோ இதற்கு நாயகமே?” திருவாசகம்)
என்ன முயன்றும் எனக்கடங்கா தென்றனுக்(கு)
இன்னல் விளைக்கும் இராக்கதனாம் – என்மனத்தை
உன்னிடத்தில் ஒப்புவித்தேன் இன்றே இனிமேலே
உன்பா(டு) அதன்பாடு காண்.
நீர்விலக்கிப் பாலருந்தும் அன்னம் அனையதொரு
நீர்மையோய் நீயென்றன் நெஞ்சிலுள்ள – ஓர்துளி
அன்பெனும் பாலுடன் ஆழிநீ ராய்க்கலந்த
புன்மையெலாம் நீக்கிப் பருகு.
பாடும் அடியார்தம் பாட்டை அறிந்தவர்
நாடும் அனைத்தையும் நல்கிடுவோய் – பீடுமிகு
பெம்மான் உனைஎளியேன் பேசத் தகுதியிலேன்
சும்மா இருந்திடச்
செய்.
அனந்த் 16-3-2019 பிரதோஷம்
படம்: குற்றாலம் சித்திரசபையின் சுவர்களில் காணும் படங்களில் ஒன்று.
படம்: குற்றாலம் சித்திரசபையின் சுவர்களில் காணும் படங்களில் ஒன்று.
No comments:
Post a Comment