திருச்சிற்றம்பலம்
<> வழி காட்டுவாய் <>
(பதினான்குசீர் ஆசிரிய விருத்தம்: தேமாங்காய் காய் காய் விளம் விளம் மா மா)
வானோடு பாதாளம் வளர்ந்தோங்கு சோதியின் வடிவமாய் நின்ற தேவே
.. வாயார உன்றன்புக ழேபாடு மன்பரின் நெஞ்சுளே வளரு மிறையே
தேனோடு தீம்பாலின் சுவையாக அடியவர் தீட்டுநற் சந்த மேவும்
.. செய்யதமிழ்ச் செய்யுளினுள் சுடர்வீசுஞ் செம்பொருள் திணிவெனத் திகழு வோனே
கானோடி இலையுண்டு கடுந்தவசு புரியினும் கருத்தினுள் களங்க முள்ளோர்
… காணாது கரந்துலவு கடவுளுனைக் கடுகள வேனுநற் குணமி லாமல்
ஊனோடும் உடலங்கொண்(டு) உறவாடி வாழுமிவ் வேழையேன் உளத்தி லுன்னை
.. ஒருசிறிய கணமேனு உன்னிடவோர் வழியினைக் காட்டிநீ உதவு வாயே.
எண்ணற்ற பிறவிகளை எடுத்திளைத் தலுத்திட்ட வேழையேன் சேர்த்த வினையுள்
.. எள்ளனைய தானதொரு நல்வினை இருப்பினதன் பயனென இவ்வே ளையில்
உண்ணிற்கு முனையறியு உண்மையினை ஓர்ந்துமெய்ஞ் ஞானமாம் நெறியில் நிற்க
.. உதவுவா யாகிலினி உலகில்யான் அவதியுற் றுழலுமிவ் வீன நிலைமுன்
பண்ணிட்ட பாவத்தின் பயனென்னும் அறிவொடுன் பரிசென அதனை ஏற்றுப்
.. பரம!நின் பாதமலர் பற்றுதல் மறவாமல் பணிசெய லாகும், மூன்று
கண்ணுற்ற கடவுளுனை யன்றிஒரு கதியெனக் கடையனுக்(கு) ஆரு மிலரே
… கதறியழும் எனதுதுயர் கனகசபை அரச!நீ கண்டெனக் கருளு வாயே.
(உண்ணிற்கும் – உள்+நிற்கும்)
... அனந்த் 1-5-2019 (பிரதோஷம்)
No comments:
Post a Comment