ஆருத்ரா தரிசனம்
கீழே காணும்
பாடல் சிதம்பரம் திருத்தலத்தில் ஆண்டு தோறும் மிகச் சிறப்பாக நடைபெறும் திருவாதிரைத் திருவிழாவைப் பற்றியது. விழாக் காலமான பத்து
நாட்களில், ஐயன்
ஆனந்த நடராஜப் பெருமான் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வாகனத்துடன்
சிவகாமி அன்னை, விநாயகர், முருகன், சண்டிகேச்வரர், மாணிக்க வாசகர் உடன்
வர, தில்லையம்பதித்
தேர் வீதிகளில் ஊர்வலம் வரும் காட்சியைக் காணக்கண்
கோடி போதாது. அடியேனுக்கு 2012-ல் அவ்விழாக் காலத்தில் சிதம்பரத்தில் இருக்கும் பேறு கிட்டியது. அப்போது நான் கண்ட
காட்சிகளை ஓரளவு இந்தப் பாடலில் வடிக்க முயன்றிருக்கிறேன்.
திருச்சிற்றம்பலம்
<> தில்லையில் திருவாதிரைத்
திருவிழா <>
மனமுமைம் புலன்களும் எட்டொணாச் சித்தெனும் மட்டிலா வெளியி னில்நீ
....வடிவிலாப் பேருணர்(வு) எனநிலைத் திருப்பினும்
மாந்தர்தாம் காண வேண்டி
.....மறைவினின் நீங்கிநற் றில்லையம்
பதியில்பொன் மன்றினைத் தேர்ந்தெ டுத்து
......வரையிலா எழிலுடை வரைமகள் அருகிலே மகிழ்ந்துனைப்
பார்த்து நிற்க,
...மாமுனி இருவரும் வாதவூ ரையரும்
வானவர்
குழுவும் காண,
....மறையவர் ஓதலும் வாத்திய முழக்கமும் வானினை
எட்ட உன்றன்
......வலதுகால் அடியிலே முயலகன் மிதிபட
மற்றுள
இடது தாளை
........வந்தெனைப் பணியுமென் றோதுமாப்
போலவோர்
வாகுடன் தூக்கி நின்று
தினமு(ம்)நீ ஆடிடும்
காட்சியை யாவரும் காணஉன் மனமி ரங்கித்
....தேர்ந்தஅத் திருஉருச் சொலித்திட மார்கழி
ஆதிரைத் திருவி ழாவில்
.....தில்லைமா நகருள தெருவெலாம்
வலம்வரும்
காட்சியின் மாட்சி மாந்தர்
.......சிந்தையில் அழிவிலாச் சித்திரம் போல்நிலை
கொள்வதில் வியப்பு முண்டோ?
...திங்களின் ப்ரபைமுதல் நாளிலும் பின்னர்ஆ
தித்தனின் ப்ரபையு மாகச்
.....சீறிடும் பூதம்மற் றொருதினம் அடுத்தநாள்
சீரிய ரிஷப(ம்) மீதும்
......செருக்குடன் களிறொடு கயிலையும்
வாகன
மாகநீ உலவிப் பிக்ஷை
........தேருமக் கோலமும் தரித்தபின்
தோன்றுவாய்
தேரிலே உன்றன் முன்னம்
எனதுயான் என்னுமோர்
மாயையில் சிக்கியிம் மாநிலந் தன்னில் சீவர்
....இடருறும் நிலையினை நீக்கிடும்
மந்திர
மெனுந்திரு வாச கத்தை
......இயம்பிடும் காட்சியில் எமதுளம் நிலைத்திட
இரவுபோய் அடுத்த காலை
........எத்தனை பிறவிகள் எடுப்பினும்
ஏற்குமிவ்
வெழிலினைக் காண வென்றே
...எல்லையில் கடலெனத் திரண்டுள உன்னடி யார்கள்தம்
கண்கள் முன்னே
....இடதுபால் உமையவள் இருந்திட
இருக்கொடு
மாமறை முழங்க வில்வ
.......இலைகொடு பூசனை செய்துன மேனியில்
உலகுள
புண்ய தீர்த்தம்
........இழிந்திடச் சந்தனம் நீறொடு கனிப்பிழி(வு)
என்(று)அபி டேகம் ஏற்கும்
வனப்பினில் காண்பவர்
உளமெலாம் நெகிழ்ந்திட விழிகள்நீர் பொழிந்து நிற்க
....வாழ்க்கையின் பயனவர்க் களித்திடும் வகையிலே
சித்சபா மண்டபத்தில்
......மாதுமை யாளொடு வாக்கினுக் கெட்டிடா ஆதிரைக்
கோலம் காட்டும்
........வாகினை எளியனும் கண்டிட வைத்தஉன் கருணையை
மறக்கி லேனே
...மண்ணிதன் இதயமாய்த் திகழ்ந்திடும் தில்லையில்
வந்தவர்க் கருளை ஈயும்
....வள்ளலே! வள்ளலார் துதிக்கு(ம்)நற் சோதியே!
வடிவிலா வடிவ மே!என்
......வாக்கினால் உன்திரு உருவினை
விளக்கிட
நினைக்குமென் பிழைபொ றுப்பாய்
........வழிபடு மடியவர் மனத்திலே
நிலைத்திடும் தெய்வமே! மன்றில் வாழ்வே!
(பா இனம்: ஐம்பத்தாறு சீர்க்
கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.
அடிப்படை
வாய்பாடு: கருவிளம் விளம் விளம் விளம் விளம் மா தேமா; 1,8,15,22,29,36,43,50 சீர் மோனை)
அனந்த்
17-3-2015