Tuesday, January 7, 2020

மீட்டுவையே

இன்று பிரதோஷ நன்னாள்

        <> மீட்டுவையே <> 

           திருச்சிற்றம்பலம்

 

எண்ணம் என்னும் இரையினையுண்(டு)
..என்னுள் ஆலாய் வளர்ந்தோங்கி

மண்ணில் கிட்டும் அனைத்துந்தன்
.. வசத்தில் இருக்க விரும்பு(ம்)மனம்

சுண்ண வெண்ணீ றணிந்தனைத்துந்
.. துறந்து வாழும் சுகமுணர்த்து(ம்)

அண்ணல் உன்றன் அடியிணையை
. அணுகும் நாள்தான் எந்நாளோ
            
                 ************* 

முன்னம் உன்றன் நினைவின்றி
.. மூடன் எனநான் திரிந்தக்கால்

பொன்னம் பலத்தில் திருநடனம்
.. புரியும் உன்றன் பேரழகை

என்முன் காட்டி யெனைஈர்த்த
.. ஈசா! இன்றெங் கோமறைந்து

வன்னெஞ் சன்போல் நடித்தென்னை
.. வாட்டத் துணிந்த(து) ஏன்ஐயே?

         *****************  

ஊனைத் தோலால் போர்த்தஇந்த..
.. உடலம் தன்னை ஊர்காண

நானென் றொருபொய்த் தலைப்பிட்டு
..
நடிக்கும் நீசன்  எனக்கெவர்க்கும்

கோனென் றவர்தம் மனத்திருந்து
..
கூத்தை நடத்தும் பரம!உன்னைத்

தானுள் நினைக்கும் அடியனெனும்
..
தலைப்பை அருளி மீட்டுவையே. 
                 ************* 
... அனந்த் 8-1-2020

No comments: