Friday, March 20, 2020

அருட்கனி

           திருச்சிற்றம்பலம்
     
         
           <>  அருட்கனி  <>
விண்ணிலுறை கற்பகத்தின் மேற்கொம்பில் எண்ணிடிசையும்
.. 
விரைகமழத் தொங்கிநிற்கும் வீங்குசுவைக் கனியொன்றை
மண்ணிலுறை ஒருமுடவன் மனத்தெண்ணி அதையுண்ண
.. 
வாய்திறந்து நின்றிருத்தல் மடமையென ஏசுதல்போல்
பண்ணுறையும் அம்பலத்தே பரசிவமாம் தருவதனில்
.. 
பழுத்திருக்கும் அருட்கனியைப் பறித்துண்டு களித்திடநான்
எண்ணுவதென் பிழையெனினும் ஏழையென்றன் பசிதீர்த்தல்
..
ஈசனெனப் பேர்படைத்தோய்ஏலாதோ உன்றனுக்கே
(எண்சீர் விருத்தம்; அரையடி- தேமாங்காய் காய் காய் காய்)

... அனந்த் 20-3-2020

Friday, March 6, 2020

நிலையாயோ?

                       திருச்சிற்றம்பலம்


   


ஆடிக்கொண் டேயிருப்பாய் அம்பலத்தில்ஆனேறி  
.. அண்டமெலாம் சுற்றிடுவாய்அன்றாட ஊணுக்காய்

ஓடிக்கொண் டேஇருப்பாய் ஓயாமல் இவ்வண்ணம்
.. ஓரிடத்தில் நில்லாத உமைபாகாஉன்னைநான்

தேடிப்பி டித்தென்றன் சிந்தையுள்ளே நிலைநிறுத்தச்
... செய்வதுந்தான் சாத்தியமோசிவலோக வீட்டினைநான்

நாடிப்பி டித்திடல்எந் நாளோ?ஓர் கணமிந்த                                         
.. நாயேனின் நிலையுணர்ந்தென் நெஞ்சுள்ளே நிலையாயோ? 
அனந்த் 7-3-2020   (சனி மகாப்பிரதோஷ நாள்)