<> பாராயோ? <>
காப்பாய் என்றோர் கணம்தோன்றும்
..
களிப்பேன், சிரிப்பேன்
கூத்திடுவேன்
தீப்போல் உடனே செய்வினைகள்
..
திரும்பி என்றன் நிலைகுலைக்கும்
மீட்பாய் என்று மீண்டுமொரு
..
வேட்கை எழுமிங் ஙனம்நிதமும்
மாய்ப்பும் பிறப்பு மாயலைந்து
..
வாழும் அவலம் தீராயோ?
(மாய்ப்பு = மாய்தல், சிவனை எண்ணாப் போதுகள் இறப்பையும் எண்ணுங் காலம் பிறப்பையும்
ஒக்கும் என்றவாறு)
*<>*<>*
பொல்லேன் யானென் றுனக்கெவரும்
… புகலல் வேண்டா என்பிழைகள்
எல்லாம் அறிவாய் என்னிறையே
… இனிநீ செய்ய ஒன்றுண்டு
கல்லைக் கனியாய் மாற்றுமுன்றன்
.. கடைக்கண் நுனியை அடியேன்பால்
தில்லைப் பதியோய்! ஒருகணம்நீ
… திருப்பின் சிறியேன் திருந்தேனோ?
*<>*<>*
மணிவா சகரின் வார்த்தையிலே*
.. மனத்தைக் கொடுத்தேன் அதன்விளைவாய்த்
தணியாத் தாகம் உனையடையத்
.. தகுதி யின்றும் உள்தோன்ற
அணியார் பொன்னம் பலத்தரசே
.. அடியேன் உன்முன் அழுதுநின்றேன்
பணிவோர்க் கருளும் பரம! என்பால்
.. பார்வை செலுத்தின் பழியாமோ?
(* “வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே” - திருவாசகம்)
,.. அனந்த்
2-7-2020 பிரதோஷ நன்னாள்
No comments:
Post a Comment