திருச்சிற்றம்பலம்
வெண்பா:
போது சடையணி பொன்னம் பலத்தரசே
ஏது குறையுமக்கென் றிவ்வாறுஎப் – போதுமோர்
காலை மடக்கிநின்று கட்டப் படுவதுபோல்
நாலுபேர் முன்னால் நடிப்பு?
கட்டளைக் கலித்துறை:
கட்டத்தைக் கூறிட நான்வருங் காலையுன் காலுயர்த்தி
நட்டத்தை ஆடி ’நடப்பதெ லாமென்றன் நாடகத்தின்
திட்டத்தின் கீழிதைச் சிந்தையில் வை’யெனச் சைகைமூலம்
சுட்டத்தான் என்றறிந் தேனினி ஏதுமில் செப்புதற்கே.
அறுசீர் விருத்தம்:
மனையவள் பாலே மாளா
… மயக்கமுள் ளோர்கள் கண்டோம்
அனைவரும் பலவாய்ப் பண்டம்
… அளித்தவர் மனையை ஈர்ப்பார்
தனதுடல் தன்னில் பாதி
… சதிக்களித் திடுவோர் தம்மை
நினைத்ததும் கண்டும் இல்லேன்
… நிருத்தமொன் றாடும் தேவே.!
அனந்த் 18-7-2020 (பிரதோஷம்)
படம்: சென்னை கபாலீச்வரர் ஆலயத்தில் நடராஜர்-சிவகாமி திருக்கோலம்; From temple calendar.
No comments:
Post a Comment