Monday, March 28, 2022

 <> ஊமையாக்கினாய் <>



a0b9a967-216a-442a-9167-c37f2556bc7d.jpg



தண்ணார்ந்த பொழில்வயல்சூழ் தில்லைவாழ் ஐயனுனைச்

.. சார்ந்தபல அடியவர்தம் சாற்றியசொல் கேட்டென்றன்

 

கண்ணாலுன் எழில்காணும் கருத்தொன்று கொண்டுனது

.. கனசபை சந்நிதியில் கைகூப்பி நின்றேனை

 

எண்ணாத வகையிலுன்றன் நேரெதிரில் நிற்கவைத்தென்

… எண்ணமெலாம் உன்னழகின் ஏற்றத்தில் கரைந்தழிய

 

உண்ணாடிச் சென்றுன்றன் உருவமெனை அழித்தவிதம்

… உலகோருக் குரைக்கவந்தேன் ஊமையென ஆக்கினையே.

 

.. அனந்த் 29-3-2022


Tuesday, March 15, 2022

சிந்தை கொள்வாய்

 



சிந்தை கொள்வாய்




அருகதையோர் துளிஉடையன் அல்லேன் ஆயின்

.. அரனுனது பெயர்கேட்ட அன்று தொட்டே

 

உருகியொரு முறையேனும் உளத்தால் நாயேன்

                     .. உரைத்திருக்க வாய்ப்புண்டென்(று) ஊகித் துன்றன்

 

திருவருளைப் பொழிந்திடநீ சிந்தை கொண்டால்

.. திருந்திஇனி உளநாளில் தினமும் உன்றன்

 

     திருவடிக்கீழ்க் கிடந்துருண்(டு) என்னைத் தேய்ப்பேன்

.. தீவினைகள் தீரும்வரை தில்லைத் தேவே.

 

                            ... அனந்த் 15-3-2022