Friday, November 4, 2022

இது போதும்

 திருச்சிற்றம்பலம்


    <> இது போதும் <>

     natana sundhara moorthi.jpg

எண்ணம் அழிந்தபின் எஞ்சியென் உளத்துள்
,,இலங்கும் உணர்வுநீ என்றுரைப்பார்

திண்ணம் அதுதிருத் தில்லையில் வெளியாய்த்
.. தெரியும் பரமெனச் செப்பிடுவார்

வண்ணம் பொலியுமிவ் வானமும் புவியும்
.. வந்த விதம்நடம் காட்டுமென்பார்

கண்ணா எனக்குநின் காலிணை எழிலைக்
.. கண்டு களித்தலே போதுமய்யே!



                     🌸🌺🌸 


    Sri Nataraja - 2020.jpg

கண்முன் தெரியுமுன் காட்சியின் மாட்சியைக்
... கண்டவர் விண்டிலர் என்றிடுவார்

பண்ணோ டிசைக்குமுன் பத்தரின் பாட்டிலுன்
.. பதத்தெழும் சிலம்பொலி கேட்பவரின்

உண்ணின்(று) உலகையும் தாண்டிநின் றோங்கிடும்
.. உண்மையை அன்னவர் அறிந்திலரே

நண்ணும் மெய்யடி யார்குழு தன்னிலே
.. நானுமி ணைந்திடச் செய்குவையே  

(உண்ணின்று = உள் நின்று)


அனந்த் 5-11-2022  சனிப்பிரதோஷம்

No comments: