Sunday, November 20, 2022

 இன்று சோமவாரப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்.


                                          திருச்சிற்றம்பலம்

                                    <> ஒன்ற வைப்பாய் <>

Chidhambara_Natarajar.jpg      Arunachalam+ Bhagavan edited.jpg

கண்டஅக் கணத்திலுன் கவின்மிகு நடத்தினில்
... கனிந்துன வசத்தில் வீழ்ந்து
....... கைதலை மேலதாய்க் கண்கள்நீர் சொரியநின்
............கருணையைப் புகழ்ந்து பாடும்

தொண்டர்தம் தொண்டரின் தொண்டரின் தொண்டரைத்
... தொழுதிட ஆசை கொண்டேன்
.. தோத்திரம் செய்திடத் தெரிந்திலேன் எனினுமுள்
....... தோன்றிடும் சொற்கள் ஏற்று

விண்டவர் கண்டிலா விந்தையாய் ஓங்கிடும்
… விசித்திர அருணை மேவி
........வெளியினில் காணுமிவ் வுலகிதன் மாயையை
............ விடுத்துளே ஏக மாகக்

கண்டதோர் ஞானிமுன் கழறிய மெய்யினைக்
... கடையனும் அறிய வைத்துக்
..... கனகமா அவையினில் ககனமாய்த் தோன்றிடும்
.........காட்சியில் ஒன்ற வைப்பாய்.  

(கனிந்துன = கனிந்துன் (உன, உன் இரண்டும் ஒரேபொருள் கொண்டவை.); ககனம் = ஆகாசம், இங்கு, சிதம்பர இரகசியம் என்னும் சிதாகாச வெளி.); விண்டவர் = விரித்துச் சொல்பவர். அருணை மேவி.... கண்டிடும் ஞானியர்= இது, தமது சிறுவயதில் திருவண்ணாமலையை அடைந்து ஞானநிலையில் அமர்ந்த பகவான் ஸ்ரீரமண மஹர்ஷியைக் குறிப்பது. கழறிய = கூறிய; கனகமா அவை = பொன்னம்பலப் பேரவை, கனகசபை.)
 
அனந்த் 20-11-2022

No comments: