திருச்சிற்றம்பலம்
<> உருவமும் உணர்வும் <>
(28-சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்; வாய்பாடு: 6 கருவிளம்+ மா தேமா; 1,8,15,22 சீர் மோனை )
மனமெனும் விழிகொடு மலைமகள் துணைவ!நின் வடிவினைக் காணு மன்பர்
.... வான்நில(வு) உலவிட மாநதி புரளுமுன் விரிசடை தனில்தொ டங்கி
... வளைந்தஉன் புருவமும் வனப்புறு நுதலிலே வன்னியோர் கண்ண தாக
..... வாய்த்ததன் வகையையும் மற்றிரு கண்களாய் மதியொடு கதிரு மாக
வனைந்துள வழகையும் வலமிடம் செவிகளில் வாய்த்த நற்குழையும் முல்லை
....வரிசையாய் எயிற்றுடைச் செவ்விதழ் வாயும்அவ் வாயிடை மலர்சி ரிப்பும்....
... வானவர் வாழ்ந்திட வரையிலாக் கருணையால் விடத்தினை உண்ட விளைவால்
.... வனப்புடன் மிடற்றினில் விளங்திடும் கருமணிப் பூணையும், புடைத்து விம்மி
அனங்கனை அழித்ததிவ் வழ(கு)எனத் திகழும்வெண் நீறணி மார்பும் அதனில்
.. அசையுமுப் புரியொடு புரண்டிடும் அரவமும் அடியரைக் காத்த ருள்செய்(து)
... அபயமும் வழங்கிடும் கரங்களும் அரையிலே புலியுரி ஆனை உரியை
.... அசைத்திடும் எழிலையும் யாவினும் மேலதாய் ஆடகப் பொற்க ழல்கள்
புனைந்தநின் திருவடி இணையையும் கண்டுளம் புளகிதம் கொள்ள வைத்துப்
... புவியிலே பிறந்ததன் பயனையாம் பெற்றனம் என்றவர் மகிழும் காலை
... புறத்திலே காண்பதை அகத்திலே பாரெனப் புண்ணியா! அருவ மான
.... பூரண நிலையினுள் புகுந்திட வைக்குமுன் புகழினை உரைக்கப் போமோ?
(ஆடகப் பொற்கழல்கள் என்பதை அகத்தில் ஆடும் பொற்கழல்கள் என்றும் கொண்டுகூட்டிப் பொருள் கொள்ளலாம்)
... அனந்த் 27-8-2015
No comments:
Post a Comment