Friday, September 25, 2015

எனது துணை

இன்று பிரதோஷ நன்னாள்*

            திருச்சிற்றம்பலம்


Inline image 1

​      
              <> எனது துணை <>

 

அரனென்பார் என்றுமெனக்(கு) அரணென்பேன், கங்கா

தரனென்பார் எனக்கவனா தாரமென்பேன், கருணா

கரனென்பார் என்னுறவுக் காரனென்பேன், மேலாம்

பரனென்பார் தரிப்பன்என் பாரமென்பேன், பணிந்து.

 

வானென்பார் சீலகுண வானென்பேன் கொம்புத்

தேனென்பார் விழைந்துகுடித் தேனென்பேன் கரத்தில்

மானென்பார் எனதுபெரு மானென்பேன் ஈசன்

தானென்பார் எனதுள்ளத் தானென்பேன், தெரிந்து. 

 

சிவனென்பார் என்னுள்வாழ் சீவனென்பேன், அருளு

பவனென்பார் மலையுறைசாம் பவனென்பேன், மூத்தோன்

இவனென்பார் யான்கேட்ட(து) ஈவனென்பேன், இரப்பான்

அவனென்பார் எனதுதுணை ஆவனென்பேன், அறிந்து.

 

..அனந்த் 25-9-2015

No comments: