Saturday, February 20, 2016

பரிந்துரை கூறீரோ?



திருச்சிற்றம்பலம்

 

<> பரிந்துரை கூறீரோ? <> 

முந்தி அரன்ஆணை முற்றும் நிறைவேற்றும்
நந்திப் பெருமகனே! நாதனை – எந்தக்
கணமும் தொடரும் கணங்களே! பத்தர்
கணக்கிலெனைக் கூட்டச்சொல் வீர்!

எம்மான் திருமுடியில் ஏற்றமுடன் வீற்றிருக்கும்
அம்மா,பா கீரதியே! ஐயனிடம் – உம்பார்வைக்(கு)
ஏங்கிநிற்கும் ஏழைஇவன் என்றுரைத்(து) எந்தையருள் 
வாங்கித் தருவீர் விரைந்து.  

பாலன்ன வெண்மைப் பனிநிலவே! சார்ந்தோர்தம்
பால்எப் பிழையையும் பாராத – சீலனென
நீயறிவாய் அந்த நிமலனை எனையுமவன்
காயாது காக்கக் கழறு. 

கொன்றை மலரே!  குழகன் குழல்முடியில்
என்றும் விரும்பியணி ஏற்றமுள்ளோய்! – சென்றவற்கு
என்றன் நிலையை எடுத்துரைத்து ஆங்கவனை
இன்றே எனக்கருளச் செய்.  

மிடற்றில் கரத்தில் விரிமார்பில் அண்ணல்
இடையில் செவியில்என எங்கும் – படஅரவே!
அண்ணலின் மேனி அலங்கரிக்கும் நீஅடியேன்
விண்ணப்பம் விளம்பாய் அவற்கு.

காமனை எரித்தமுக் கண்ணரைக்கண் ணால்மயக்கி
வாமபா கம்தர வைத்தவளே! – போம்உம்மை
அன்றிவே றெத்துணையும் அற்றஇப் பிள்ளையை
இன்றேகாப் பாற்றுமென ஏவு.

அனந்த் 19-2-2016

No comments: