Tuesday, March 13, 2018

கருணை முகிலோன்

இன்று பிரதோஷ நன்னாள்.
திருச்சிற்றம்பலம்

<> கருணை முகிலோன் <> 

பாதாதி கேசமும் கேசாதி பாதமும் பரவிநான் தில்லை மேவும்
நாதாநீ நாடொறும் ஓயாமல் ஆடிடும் நேர்த்தியில் மயங்கி நிற்பேன்
ஏதேனும் ஓர்விதம் ஈடேது மேயிலா இவ்வெழில் தன்னைப் பாவில்
கோதேனும் இன்றிநான் பாரோர்க்கி யம்பிடப் பரம!நீ வகைசெய் யாயோ?

நிறைபுனல் நதியும் கலைகுறை மதியும் உறைசடை சூடும் பெருமான்காண்
மறையினை நிதமும் முறையுடன் பயிலும் திறமுடை அடியர்க் கருள்வோன்காண் 
கறைமிட றுடையெம் இறையெனும் பெருமை நிறைசிவன் கருணை முகிலோன்காண்
குறைமலி எளியன் பறையுமென் துதியும் பொறையுடன் கொளுமென் பெருமான்காண்.

கொட்டும் துடியுடன் நட்டம் நிதம்புரி சிற்றம் பலமுறை பெருமான்காண்
பட்டின் துகில்நிகர்க் கற்றைக் குழலியள்  பற்றும் பெருமைகொள் பெருமான்காண்
கட்டும் பழவினை முற்றும் விலகிட அத்தம் வழிஅருள் பெருமான்காண்  
மட்டில் புகழுடைச் சிற்றம் பலந்தனில் பத்தர்க் கருள்செயும் பெருமானே.
(அத்தம் கைஇங்கு அபயஹஸ்தம் குறிக்கப்பட்டது.)

..அனந்த் 12/13-3-2018

No comments: