திருச்சிற்றம்பலம்
<> அணைத்திட வாராயோ?* <>
பன்னெடுங் காலமாய்ப் பணிந்துநான்
வணங்கிய பாதமென் பாவங்கள்
..பாறிடு
மாறுநீ செய்திடு நாளினைப் பார்த்திட லாகாதே
….பாவியென்
ஆருயிர் ஏகிடின் பாருனைப் பழித்திட லாகாதோ?
…….பண்டுநின்
னடியவர் கூறிய யாவையும் பயனில வாகாவோ?
என்னவன் என்னுயிர் என்றுனை நான்நிதம்
எண்ணுவ தறியாயோ?
..ஏழையன்
செய்பணி ஏற்றிடல் உன்நிலைக்(கு) இழிவெனக் கொண்டாயோ?
…..எவ்வகை
யேனுமுன் இணையடி நீழலை எட்டுவ னெனுமாசை
……..என்னுளெ
ழுந்துவ ளர்ந்தது மென்தவ(று என்றினிப் போகாதோ?
உன்னிடில் யாவுளும் உள்ளதொர்
உண்மையென் றுறைபவன் நீயலையோ?
…உன்னிலும்
அன்னியன் என்றுயான் எண்ணுவ(து) உன்செய லேயன்றோ?
….உன்னரு
ளாலல தெவ்வகை யாலினி உய்வனென் றோராயோ?
……உள்ளெழுந்
தூறிடு மன்பினில் ஊறெதும் உண்டெனக் கண்டாயோ?
அன்னையோர் மேனியில் பாதியை ஆள்வதுன்
அடியிணை நாடிவரும்
… அன்பர்தம்
அழுகையுன் செவியினில் வீழ்ந்திடற் காகவென் றறியாயோ?
…..அன்றொரு
மாணியின் அணைப்பினில் உளம்நெகிழ்ந் தருளிய பரமேசா!
……..அற்பனேன்
உன்மக வாமெனக் கொண்டெனை அணைத்திட வாராயோ?
(பன்னிரு சீர் ஆசிரிய விருத்தம்;
*அரையடி வாய்பாடு: கூவிளம் விளம் விளம் விளம் விளம் கூவிளங்காய்)
No comments:
Post a Comment