Sunday, December 22, 2019

பெருந்தவசி

                திருச்சிற்றம்பலம்

               <> பெருந்தவசி <>


     


அருந்துவது நஞ்சைப் பின் ஆடுவதோர் நடத்தை;
பொருந்துவது பெண்ணை முன் பொசுக்கியது மதனை
விருந்துசிறு பிள்ளை பின் விளக்குவது மறையை
பெருந்தவசி என்றே ஊர் பேசுவதேன் இவரை?
(சிறுபிள்ளை= சிறுத்தொண்ட நாயனாரின் புதல்வன் சீராளன்)

                 
                   ​

சிறியதொரு பிள்ளை பாப் புனைந்துவியப் பூட்டும்
குறியெதுவு மின்றிக் கால் கொண்டுதைத்த வேடன்
அறிவரிய பேற்றைத் தான் அடைந்திடலு மாகும்
நெறியறிவி லேன்என் கல் நெஞ்சினுளும் வாழும்.
 (சிறியதொரு பிள்ளை = திருஞானசம்பந்தர்)

காசுபண மில்லான் போல் கையில்தலை யோட்டைக்
கூசலிலா தேந்தி ஊண் கொண்டிரக்கும் கூத்தன்
வாசுகியைப் பூணாய் இடை வனைந்துலகோர் கூறும்
ஏசலெலாம் பாட்டாய் இவன் ஏற்றுமகிழ் வானே.  

சிவனைநினை யாமல் ஓர் அரைநொடியும் வாழேன்
அவனழகை நித்தம் என் அகமதனில் காண்பேன்
தவமெனஎந் நாளும் பூந் தாளடைந்து வாழ்வேன் 
பவமெனுமொர் பாதை என் பால்வரலும் ஆமோ?

(பாதை = உபாதி, வேதனை)

.. அனந்த் 23-12-2019 கார்த்திகை சோமவாரப் பிரதோஷம்

Sunday, December 8, 2019

உள்ளொளி


                                   திருச்சிற்றம்பலம் 

                      <> உள்ளொளி <> 

 
                      
செம்மலையாய் நம்முன்னே தீபஒளி வீசிசிவச்  
செம்மலைநம் சிந்தையுளே தெரியவைக்கும் சோதியினை
நம்மலையும் மனத்தகத்துள் நாட்டிநிலை நிறுத்திவிடின்
மும்மலமும் தீய்ந்தொழிந்து முத்திநிலை கிட்டிடுமே.  

மெய்ம்மலையாய்க் காணருண மாமலையை விட்டிந்தப்
பொய்ம்மலையாம்  என்றன் புலையுடலைமெய்யெனநான்
எண்ணும் நிலைமாற என்னிறையே நானுன்னை
நண்ணிடவை அண்ணா மலை. 


.. அனந்த் 9-12-2019 (கார்த்திகை சோமவாரப் பிரதோஷம்) 

Saturday, November 23, 2019

என்னைக் கவர்ந்தோன்


                               திருச்சிற்றம்பலம் 


                      <> என்னைக் கவர்ந்தோன் <>













இல்லையினி நாடுவதற்(கு) இறையெவரும் எனும்படியாய்ப்
பல்வேறு தெய்வங்கள் பால்நாடிச் சென்றேனைச்
சொல்லெதுவும் இன்றிக்கைச் சுட்டொன்றால் வரவழைத்துக்
கல்லாலின் கீழிருக்கும் கடவுளுனைக் காட்டினையே.

                   


கரும்பதுதன் சுவைகாட்டிக் கட்டெறும்பைக் கவர்வதுபோல்
பெரும்பற்றப் புலியூர்ப்பொன் மன்றிலுன்றன் நடத்தெழிலைத்
துரும்பிலுங்கீழ் ஆனஇந்தத் துட்டன்முன் காட்டியினி
விரும்பினும்நான் வேறுதிசை செல்லவொட்டா(து) ஆக்கினையே.


                                                                                                                                                                             
கண்ணின்நீ ரருவியிலென் கடவுளுனை நீராட்டி
வெண்ணீற்றுப் பூச்சாலுன் மேனியைநான் எழிற்படுத்தி
உண்ணெக்கு நெக்குருகி உளறுவதைத் தோத்திரமாய்ப்
பண்ணின்றிப் பாடுவதைப் பரிகசியா தேற்பாயே.

..அனந்த் 23-11-2019 சனிப் பிரதோஷச் சிறப்பு நன்னாள் 

Friday, November 8, 2019

மாடு பெரிது

திருச்சிற்றம்பலம் 

                         <> கூத்தின் இறை <>

     

மாடூரும் அன்பர் மனமுருகிப் பாடிவைத்த
ஏடூரும் தேகம் எரிந்தழிந்து மாயுமந்தக்
காடூரும் காண்பொருட்கள் ஊடூரும்  என்நெஞ்சக்
கூடூரும் கூத்தின் இறை.   
(ஊர்தல்= ஏறிச்செல்லுதல், சஞ்சரித்தல், பரவுதல், அடர்தல்….)


                   <> மாடு பெரிது <>





















மாடு முதுகேற்கும் மந்திரஞ் சொல்லியோர்
ஆடு துதிசெய்யும் ஆங்கொருபேய்  காடடைந்து
பாடும் பதிகம் பரமன் இவனது
மாடு மிகப்பெரிதம் மா!
(மாடு = நந்தியெம்பெருமான், புகழ்; ஆடு = தக்கன், மந்திரம் = சமகம்; பேய் = 
காரைக்காலம்மையார்)
அனந்த் 9-11-2011 சனிப் பிரதோஷம்


கூத்தன்


இன்று சனிப் பிரதோஷ நன்னாள்.

திருச்சிற்றம்பலம்

                                                           <> கூத்தன்  <> 


                           


 மழுவை ஏந்தும் கையொன்று மாந்தர் பிறவித் தளையறுக்கும்

..வடிவார் துடிசேர் கரமொன்று வாவென் றடியார் தமையழைக்கும்

எழுமான் ஏந்தும் கையொன்றோ ஏகும் மனத்தை நிலைநிறுத்தும்
.. எரியைத் தாங்கும் கரமொன்றோ ஏதம் சிறிதில் லாதழிக்கும்

தொழுவார்க் கருளும் பதமொன்று  தோலா அருளைச் சுட்டிநிற்கும்
.. தொண்டர் வருடும் அடியொன்று தோற்றம் மறையும் மெய்யுணர்த்தும்

வழுவா திந்த வடிவினைநாம் வாழ்த்தி வணங்கு வோமாயின்

 வருமோ இதைவிட் டொருநினைப்பு வாழ்க்கைக் காலம் முழுவதுமே.


(பன்னிருசீர் விருத்தம், 1,4 சீர் குறில்-நெடில் இணை;  எழுமான் = எழுந்தோடும் மான்; ஏகும் = கண்ட இடம் செல்லல்; எரி=நெருப்பு; ஏதம் = துன்பம், குற்றம்; தோலா = தவறாத; )


Thursday, October 24, 2019

தீயை எரித்திடும் தீ

                          திருச்சிற்றம்பலம்

           

          
                      <> தீயை எரித்திடும் தீ <>

நெஞ்சமாம் காட்டினுள் நினைப்பென நிலைத்தெனை வாட்டிடும் தீப்பி ழம்பே!
.. நின்பெரு மாசைகள் நிறைபெற நீணிலம் எங்கும்நான் ஓடி யாடி

வஞ்சகம் பேசிநீ வேண்டிய யாவையும் விறகென உன்னி லிட்டும்
.. வளர்ந்துமென் மேலும்நீ வானுற ஓங்குத லன்றிமங் கிடுதல் காணா(து)

அஞ்சிமேற் செய்வதிங்(குயாதென நிற்கையில் அற்பனென் மேலி ரங்கி
.. அருணைமா மலையுறை அண்ணல்தன் அடியரின் கூட்டிலே சேர்த்து நானும்

உஞ்சிடும் வழியினை உதவினன் இனியும்நீ ஓங்கிடா வண்ண மென்றன்
.. உளமவன் ஒளிருநற் சோதியில் உன்னைநான் உருகிடச் செய்கு வேனே.

(நீணிலம் = நீள்நிலம், உஞ்சிடும் = உய்ந்திடும்; பதினான்குசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்; அரையடி கூவிளம் விளம் விளம் விளம் விளம் மா தேமா)

..அனந்த் 25-10-2019 பிரதோஷம்
...  
                     

                         

Thursday, October 10, 2019

ஐயன் திருவுரு

               திருச்சிற்றம்பலம் 





               <> ஐயன் திருவுரு <>

தெளிமதுத் தீஞ்சுவை ஊற்றெனத் தோன்றியென்
.. சிந்தையுள் அமுதக் கடலாகக்

களிதரு வீணையின் நாதமாய் என்னுளே
.. கலித்திடும் கான மழையா 

வெளிஒளி மறையினும் உள்ளிருந் தொளிர்ந்திடும்
...விந்தையாம் ஞானச் சுடராக

அளியிலே விளைந்தஎன் ஐயனின் திருவுரு
.. அகத்தினில் என்றும் நிலைகொளுமே

(கலித்தல் = லித்தல்தழைத்தல்எழுதல்.  எழுசீர் விருத்தம்: கருவிளம் விளம் விளம் விளம் விளம் மா காய்)

அனந்த் 11-10-2019

Wednesday, September 25, 2019

அதுவே போதும்

                        திருச்சிற்றம்பலம்


                      <> அதுவே போதும் <>

                  

உன்னருள் கிட்டநான் ஆற்றிலேன் உனக்கென ஒருவகைப் பணிக ளேனும்
… உரைப்பதற் கேற்றதோர் உத்தமப் பண்பெதும் உண்மையில் துவுமில்லாப்

புன்மையேன் ஆயினும் புனிதநின் திருவருள் வரம்பிலா வாரி யென்று
.. புகன்றிடக் கேட்டுளேன் புல்லன்நான் ஆகையால் புறக்கணித் திடுத லென்ப(து)

அன்னியம் உனக்கென அறிந்தபின் வந்துளேன் ஆதரித் தருளு வாயேல்
.. அகன்றிடும் என்துயர் அதன்பினென் ழுகுரல் உன்செவி மடுக்க வேண்டா

பொன்னிற மேனியும் பூணும்வி பூதியும் புரிசடை மீது கொன்றை
.. புரளுமக் கோலமும் பொருந்தநீ வருமெழில் காட்டினால் போதும் ஐயே.

(14-சீர் ஆசிரிய விருத்தம். அரையடி: கூவிளம் விளம் விளம் விளம் விளம் மா தேமா -படிக்கையில் ஈற்றுச் சீரை விளங்காய்ச் சீராகவும் கொண்டு படிக்கலாம்.)

... அனந்த் 26-9-2019

Tuesday, September 10, 2019

ஆடலரசன்


                             திருச்சிற்றம்பலம்

                
















                     <> ஆடலரசன் <>

நடமாடீ கண்ட விடமாடீ பெண்ணோர்
இடமாடீ தீயாடீ என்றன்உடலாடும்
நெஞ்சத் தடமாடி நீவந்தாங்(கு) ஆடென்று
கெஞ்சுகின்றேன் மன்றாடி கேள்.

(நடமாடீ = நடனம் செய்பவனே; துபோல மேல்வரும் விடமாடீ என்ப விளிச்சொற்கள்; ஆடுதல் = அசைதல், அலைதல், நடஞ்செய்தல், அனுபவித்தல், செய்தல், கலத்தல்,…;  கண்ட விடம் = கழுத்தில் விடம் அல்லது காணும் பல இடங்களில்; தடம் = இடம், வெளி..…; தடனாடி = தடம்+நாடி; மன்றாடி = குறையிரந்து வேண்டி அல்லது வழக்காடி, (சிவனும் மன்று ஆடி தான்! )
ஈற்றடியில்பின்னிரு சொற்களை இடம்மாற்றிப் (கொண்டுகூட்டிப்) பொருள் கொள்ள வேண்டும்)

நீறாடி அன்பர்பொழி நீராடி அஞ்சடைமேல்
ஆறாடி சீறும்  அரவாடி மங்கையொரு
கூறாடி கூத்தாடி கூர்வேற் படையாடி
சீராடி உய்வோம் தெளிந்து.

(முதல் மூன்றடிகளில் ஆடி என்பது பெயர்ச்சொல்லாகவும் ஈற்றடியில் வினையெச்சமாகவும் பயிலும். ஈற்றடியில், பின்னிரு சொற்களை இடம்மாற்றிப் (கொண்டுகூட்டிப்) பொருள் கொள்ள வேண்டும்.)

அனந்த் 11-9-2019