Thursday, November 26, 2020

 இன்று பிரதோஷ நன்னாள்.


              திருச்சிற்றம்பலம்


               <> ஒருகால் ..<>


 




சிரித்தெனை மயக்கும் ஒருகால்

திருப்பதம்* தன்னைக் காட்டி

வரித்தெனை ஈர்க்கும் ஒருகால்

மாவினைப் பயனை எல்லாம்

உரித்தெனைக் காக்கும் ஒருகால்*

உறுபிறப் பிறப்பை வாரா

தெரித்தெனைச் சேர்க்கும் தன்பால்

தில்லைவாழ் தெய்வ மாமே.


(அறுசீர் விருத்தம்; *ஒரு காலத்தில்; திருப்பதம் = சிவபதம்; சிவசாயுச்சியம்.)


            *********

ஒருகா லிருத்தி ஒருகால் உயர்த்தும் உனநடத்தை

ஒருகா லிருத்தி* உடலினை ஓம்புமென் உள்ளினில்நீ

ஒருகா லிருத்தின் எனதுயிர் உய்யும்முன் ஓர்சமயம்

ஒருகா லிருத்தியொர் **கண்ணிடந் தோற்கருள் உத்தமனே

 

(கட்டளைக் கலித்துறை. உனநடத்தை = உன் நடனத்தை; *கால் = காற்று, இங்கு, மூச்சுக்காற்று;  **இடந்து = தோண்டி - கண்ணப்பன் பற்றிய குறிப்பு.)

 

              *********  

ஒருகால் உருகுமென் னுள்ளம் உன்னிடம் ஒன்றி,எனில்

ஒருகால் உனைமறந் தெத்தையோ உன்னும் உனையடைய

ஒருகால் இழுத்தொரு கால்விட் டுயர்தவம்* ஆற்றிலனுன்

இருகால் அடிக்கீழ் இருத்திடின் உய்வேன் எனதிறையே.

(கட்டளைக் கலித்துறைபூரகம், ரேசகம் என்னும் இருவகை மூச்சு)

 அனந்த் 27-11-2020

No comments: