திருச்சிற்றம்பலம்
<> கட்டற்ற பூரணம் <>
கட்டளைக் குட்படாக் காரணப் பூரணன் காலவிடக்
கட்டளைக் குட்படு காரிய மாயுருக் காட்டிடமுன்
வெட்ட வெளியாய் விரிந்துபின் காற்றாய் விளங்கியபின்
சுட்டிடும் வெப்பமொ டண்புனல் சூழ்நிலந் தோன்றுமந்தத்
திட்டந் தனைநனி தேர்ந்துணர்ந் தோர்நிதம் சிந்தையிலே
நட்டம் புரிந்திடு நாதனின் றாளிணை நாடிமிகக்
கட்ட மலிந்த பிறவிக் கடலின் கரைதடுப்புக்
கட்டை யுடைத்துக் கலப்பர் தனித்தயே கத்தினுளே.
பதம் பிரித்து:
கட்டளைக் குட்படாக் காரணப் பூரண காலஇடக்
கட்டளைக் குட்படு காரிய மாயுருக் காட்டிடமுன்
வெட்ட வெளியாய் விரிந்துபின் காற்றாய் விளங்கியபின்
சுட்டிடும் வெப்பமொடு தண்புனல் சூழ்நிலம் தோன்றுமந்தத்
திட்டம் தனைநனி தேர்ந்துணர்ந் தோர்நிதம் சிந்தையிலே
நட்டம் புரிந்திடும் நாதனின் தாளிணை நாடிமிகக்
கட்டம் மலிந்த பிறவிக் கடலின் கரைதடுப்புக்
கட்டை உடைத்துக் கலப்பர் தனித்தஏ கத்தினுளே.
விளக்கம்: காலம், இடம் இவற்றுள் கட்டுப்படாமல் ஒன்றாக உள்ள மெய்ப்பொருளிலிருந்து (பிரம்மத்திலிருந்து), நாம் காணும் பிரபஞ்சமும் அதனுள் உயிரினங்களும் ஒன்றன்பின் கீழ்க்கண்ட வரிசையில் உருவானதாக மறைகளில் விரித்துக் கூறப்படும்: ஆகாயவெளி, காற்று, தீ, நீர், பூமி, உயிரினங்கள். இவ்வாறு பிறந்தும் இறந்தும் நாம் படும் அவதிக் கடலிலிருந்து கரையேறத் தில்லை நடராசப் பெருமானின் திருவடியைப் பற்றியவர்கள், கட்டற்ற ஏகாந்த வெளியில் கலந்திடுவர்.
(இப்பாடல் கட்டளைக் கலித்துறைச் செய்யுள் அமைப்புக் கொண்டது.)
அனந்த் 3-2-2023
No comments:
Post a Comment