Wednesday, July 31, 2024

இன்று பிரதோஷ நன்னாள். 

                                                                திருச்சிற்றம்பலம் 

                                     <> விந்தை புரிவாய் <>


கல்லேன்யான் ஆயினும்பொய் சொல்லேன் உனைவழுத்த 

வல்லேன்யான் அல்லேன்உன் அடியிணைக்கீழ் வந்துநின்றேன்

*கல்லானை தனையன்று கரும்புண்ணச் செய்தோயிப்

பொல்லேனின் பிழைபொறுத்துன் அடியாருள் புகுத்துவையே.

(*இது ஆலவாய் நகரில் சிவபெருமான் நிகழ்த்திய அறுபத்துநான்கு திருவிளையாடல்களில் ஒன்று.)

                                     ********

                            

                        






 




கையாலா காதஇக் கடையேனுன் திருப்பாதம்

கையாலே பற்றினேன் காவாயோ வந்தென்னை?

கையாலே அருள்காட்டிக் கனகசபை தனிலாடும்

ஐயாநீ ஆளாயேல் ஆருள்ளார் புகல்வாயே.



.... அனந்த் 31-7-2024/ 1-8-2024





Thursday, July 18, 2024

 இன்று பிரதோஷ நன்னாள்.

திருச்சிற்றம்பலம்

             <> சேவகம் அருள்வாய் <>



ஏவிய கணையை யொத்தென் இருவினைப் பயன்கள் என்னை

மேவியென் நடப்பின் போக்கை விதித்திடுங் காலை உன்னைக்

கூவிநான் அழைத்தென் கையைக் குவித்துனைப் போற்றிப் பாடுஞ்

சேவகம் அருளாய் எற்குத் தில்லைதே வாதி தேவே.   

(கூவிளம் புளிமா தேமா கருவிளம் புளிமா தேமா; விதித்தல் = உண்டாக்கல், நியமித்தல்,.. ) 

                      *****************

               <> வீடடையும் வழி <>




உதைபந்து போல உலகிலடி பட்டு

வதையுற்று வாடிய வேளை - சிதைமலிந்த

காடதனில் ஆடிடும் காலடியைச் சுட்டினான்          

வீடடையும் மார்க்கமீ தென்று.

                        *****************

                                                                                 ... அனந்த்  18/19-7-2024

                                          

Tuesday, July 2, 2024

விளக்கிடுவாய்


 திருச்சிற்றம்பலம்

 <> விளக்கிடுவாய் <>





                                                                      
எவ்விடம் ஆயினும்  எப்பொழு தாயினும் இலங்குமோர்  பரமுன் னையோர்
.. எல்லையுள் இருத்தியுன் இயல்பிதே ஆமென இயம்பிடல் தவறே னும்யான்

வெவ்வகை யாகஉன் வடிவினை ஐயநீ விரும்பிடும் அடியர் பலரும்
.. விரித்துன துருவினை விளம்பிடக் கேட்டுளேன் மேலும்நீ  ஆங்க வற்றுள்

இவ்விடத் துள்ளனன் காணுவீர் என்றொரு தலத்தையோ அன்றி அருகில்
... எழில்திகழ் சிலையையோ என்முனம் இருத்துவர் என்மனம் அதையும் ஏற்கும்

வெவ்விடம் தன்னையுன் மிடற்றினில் அடக்கியோய் வெகுளியென் மயக்கை நீக்க
... விரைவிலென் அகத்துளே விளங்கியுன்  சால்பினை விளக்கிட வேண்டு வேனே.

 

 

                           ….. அனந்த் 2-7-2024