Friday, June 26, 2026

 திருச்சிற்றம்பலம்

<> கண்ணீரில் கரைந்த வினை <>


Nataraja and space.jpg


அன்னே! நீஎன் அகம்புகுந்துஅங்(கு)

.. அனலைக் கிளப்பி அதன்நடுவில்

 

முன்னே புரிந்த வினையெல்லாம்

... முற்றும் எரித்தென் முகத்திழியும்

 

கண்ணீ ரதனில் கரைத்துவிட்டாய்

... காலம் கடந்தேன் கனகசபை

 

மின்னே! வரையில் பெருவெளியில்

... விளங்கும் பரமே! மெய்யுணர்வே!

 

(அறுசீர் ஆசிரிய விருத்தம்; வரையில் = வரை (அளவு) இல்லாத)

                           .....  ...... அனந்த் 26-6-2026

Thursday, June 11, 2026

 இன்று பிரதோஷ நன்னாள்.


                 திருச்சிற்றம்பலம்


                         2224ae9a-0f02-47b7-9a5c-577095524b15.jpg

 

                                                                           

                 <> இது தருணம் <>


சந்தக்குழிப்பு:

தனதனன  தனதனன தனதனன தனதனன  தான தானான
தனதனன  தனதனன தனதனன தனதனன  தான தானான


கனகமென ஒளியுமிழும் கலுழன்மிசை உலவிவரு மாயன் சேயோடு

... ககனவெளி தனில்வதியு மமரர்தலை வனுமுனது வாயில் சேராநின்(று)


அனவரதம் அரனெனுமு(ன்) அடிநிழலில் இசைபரவு வேளை நாயேனிங்(கு)

... அழுவிழியுந் தொழுகரமும் அகமுழுதும் உனநினைவும் மேவ நீயேவந்(து)


எனையுமுன தடியனென* கருதிடுவை எனும்நினைவில் வாழ்வன் ஆவானென்(று)

... இறையுனது மனமதனில் கருதியொரு கணமுனது சேவை ஈவாயின்


தனதுகழல் நினையடியர் தமதுதுயர் களைதலைவன் நீயென் றீரேழு

... சகமுணருந் தருணமிது சடிதிஎன முனமணுகு வாயெம் தேவேச!


(கலுழன்= கருடன்; வாயில்=வாசலில், ககனம்=ஆகாயம்; வதியும்=வசிக்கும்; இசை=புகழ்; பரவு= துதிக்கின்ற; சேராநின்று=சேர்ந்து; அனவரதம்=எப்போதும்; உன= உனது; மேவ = மேலிட; தடியனென* கருதிடுவை—சந்தத்தையொட்டி வல்லொற்று மிகாமல் நின்றது; சேவை=தரிசனம்; ஈவாயின் – தந்தால்; நினையடியர்= நினைத்திடும் அடியர்; சடிதி= விரைவில்.)


                                    ...... அனந்த் 11/12-6-2026